மெட்ரோ ரயில் முன் பாய்ந்து அரசு ஊழியர் தற்கொலை முயற்சி
பெங்களூரு: மெஜஸ்டிக் மெட்ரோ ரயில் நிலையத்தில், மெட்ரோ ரயில் முன் பாய்ந்து, அரசு ஊழியர் தற்கொலைக்கு முயன்றார். பெங்களூரு மெஜஸ்டிக் மெட்ரோ ரயில் நிலையத்தின் மூன்றாவது நடைமேடை தண்டவாளத்தில், நேற்று மதியம் 3:17 மணிக்கு, சில்க் இன்ஸ்டிடியூட்டில் இருந்து மாதவாரா செல்லும், மெட்ரோ ரயில் வந்து கொண்டு இருந்தது. நடைமேடையில் நின்ற ஒரு ஆண் பயணி திடீரென தண்டவாளத்தில் குதித்தார்; அவர் மீது ரயில் மோதியது. ரயிலின் அடியில் சிக்கிக் கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக பயணியர் அலறினர். மெட்ரோ ரயில் நிலைய ஊழியர்கள், மின் இணைப்பை துண்டித்தனர். தண்டவாளத்தில் இறங்கி, ரயிலின் அடியில் சிக்கியவர் மீட்கப்பட்டனர். ரயில் மோதியதில் அந்த பயணிக்கு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தகவல் அறிந்த உப்பார்பேட் போலீசார், ரயில் நிலையத்திற்கு சென்று பயணியர், மெட்ரோ ரயில் ஊழியர்களிடம் விசாரித்து தகவல் பெற்றுக் கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், ரயில் முன் பாய்ந்தவர் விதான் சவுதாவில் 'டி' குரூப் ஊழியராக பணியாற்றும் வீரேஷ், 35, என்பதும், தற்கொலை செய்யும் நோக்கத்தில் தண்டவாளத்தில் குதித்ததும் தெரிந்தது. தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் தெரியவில்லை. மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட, வீரேஷ் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பெங்களூரில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில், இதற்கு முன்பும் சிலர் ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்துள்ளார்; சிலர் தற்கொலைக்கும் முயன்று உள்ளனர். இதனால் தண்டவாளத்தில் கண்ணாடி தடுப்பு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை, பயணியரிடம் எழுந்துள்ளது.