அரசு மருத்துவமனை உணவக கேசரியில் பல்லியால் பரபரப்பு
ஹாவேரி: ஹாவேரி மாவட்ட மருத்துவமனை உணவகத்தில், வாடிக்கையாளருக்கு வழங்கிய கேசரியில் பல்லி இருந்ததால், நோயாளிகளின் போராட்டத்தை அடுத்து, உணவகம் மூடப்பட்டது. ஹாவேரி மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில், 'ராகவேந்திரா உணவகம்' உள்ளது. நேற்று காலையில் இங்கு குழந்தை பிரசவித்த பெண், அவரது உறவினர்கள், கேசரி ஆர்டர் செய்தனர். பிரசவித்த பெண் சாப்பிட்ட உணவு பொட்டலத்தில், சிறிய பல்லி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அங்கிருந்த உணவக ஊழியர்களிடம் அவர் விசாரித்தார். இதை அறிந்த மற்ற வாடிக்கையாளர்கள், உணவக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து உணவகம் மூடப்பட்டது. பிரசவித்த தாயை, அம்மருத்துவமனை டாக்டர்கள் பரிசோதித்தனர். அவரின் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை உறுதி அளித்தனர். இதனால் அவரும், அவரது குடும்பத்தினரும் நிம்மதி அடைந்தனர். உணவகம் நடத்தி வரும் சந்துரு கூறுகையில், ''இன்று (நேற்று) காலை தான் உணவகத்தை திறந்து வைத்து விட்டு, வீட்டுக்கு சென்றேன். ''கேசரியில் பல்லி விழுந்திருந்ததாக வாடிக்கையாளர்கள் கூறினர். பல்லி எப்படி வந்தது என்று எனக்கு தெரியவில்லை. ''உணவகத்தை முற்றிலுமாக சுத்தம் செய்துவிட்டு, வரும் நாட்களில் இது போன்ற சம்பவம் நிகழாமல் பார்த்து கொள்வேன்,'' என்றார்.