துங்கபத்ரா அணை மதகு கதவு அமைக்க நடவடிக்கை எடுக்காத அரசு
கொப்பால் : துங்கபத்ரா அணையின் 19வது மதகு கதவு தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு 9 மாதங்கள் ஆகியும், இதுவரை புதிய கதவு அமைக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.கொப்பால் - விஜயநகர மாவட்ட எல்லையில் முனிராபாத் பகுதியில் துங்கபத்ரா அணை உள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் பெய்த தென்மேற்கு கனமழையால் அணை நிரம்பியது. செப்டம்பர் 26ம் தேதி, அணையின் 19வது மதகு கதவு திடீரென உடைந்து, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.கதவு இல்லாத மதகு வழியாக இரண்டு நாட்களில் 13 டி.எம்.சி., தண்ணீர் வெளியேறியது. இதனால் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதையடுத்து மதகிற்கு தற்காலிக கதவு பொருத்தும் பணி தீவிரமாக நடந்தது. நான்கு நாட்களுக்குப் பிறகு கதவு பொருத்தப்பட்டது.அணையில் உள்ள அனைத்து மதகுகளின் கதவுகளையும் மறுசீரமைக்கப்போவதாக அரசு தெரிவித்திருந்தது. ஆனால் 9 மாதங்கள் ஆகியும், தற்போது வரை உடைந்த மதகின் கதவு உட்பட எந்த கதவையும் மாற்ற அரசு முயற்சி செய்யவில்லை.தற்போது தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ளது. துங்கபத்ரா அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்யும் போது, கண்டிப்பாக அணை நிரம்பலாம். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஏதாவது மதகின் கதவு உடைந்து விடுமோ என்ற அச்சம், விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு மீது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.