கோலார் காங்கிரஸ் பிரமுகர் கொலை சி.பி.ஐ., விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
பெங்களூரு: அமைச்சர் பரமேஸ்வரின் ஆதரவாளரான, கோலார் காங்கிரஸ் பிரமுகர் கொலை குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோலார் சீனிவாசப்பூரை சேர்ந்தவர் சீனிவாஸ். காங்கிரஸ் பிரமுகர். கோலார் மாவட்ட பஞ்சாயத்து தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.கடந்த 2023, அக்டோபர் 23ம் தேதி சீனிவாசப்பூர் ரூரல் பகுதியில், சீனிவாசை அரிவாளால் வெட்டி ஒரு கும்பல் கொலை செய்தது. இவ்வழக்கை சீனிவாசப்பூர் போலீசார் விசாரித்தனர். ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.இதற்கிடையில் விசாரணை சரியாக நடக்கவில்லை என்றும், சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க கோரியும் சீனிவாஸ் மனைவி சந்திரகலா, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.விசாரணையின்போது, சந்திரகலா தரப்பு வக்கீல் தன் வாதத்தின் போது, 'கொலையின் பின்னணியில் அரசியல் சதி இருக்கிறது. விசாரணை சரியாக நடக்கவில்லையென, மனுதாரர் நினைக்கிறார். கணவரை இழந்தவருக்கு சி.பி.ஐ., விசாரணை கேட்கும் உரிமை உள்ளது' என்றார்.அரசு வக்கீல் வாதிடுகையில், 'போலீசார் விசாரணை சரியான திசையில் செல்கிறது. கொலையில் அரசியல் பின்னணி உள்ளதா என்றும் தீவிர விசாரணை நடத்துகின்றனர்' என்றார்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நாகபிரசன்னா நேற்று தீர்ப்பு கூறினார். மனுதாரர் தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்டு சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டார். மூன்று மாதங்களுக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவும், சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு, போலீசார் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூறினார்.