மேம்பாடு, பாரம்பரியம் சமநிலையில் இருந்தால் இந்தியா வளர்ச்சியடையும்: துணை ஜனாதிபதி
பீதர்: ''இந்தியாவின் வளர்ச்சி என்பது மேம்பாட்டையும், பாரம்பரியத்தையும் சமநிலையில் கொண்டதாக இருக்க வேண்டும்,'' என, துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். பீதரில், ஸ்ரீ சென்னபசவ ஆசிரமத்தில், டாக்டர் பசவலிங்க பட்டதேவரு மஹாசுவாமிகள் அம்ரித் மஹோத்சவத்தை, துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் நேற்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்பட பலர் பங்கேற்றனர். இதில், துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பேசியதாவது: இந்தியாவின் வளர்ச்சி என்பது மேம்பாட்டையும், பாரம்பரியத்தையும் சமநிலையில் கொண்டதாக இருக்க வேண்டும். இது தான் பிரதமர் மோடி முன்வைத்த வளர்ச்சியும், பாரம்பரியமும் என்ற தொலைநோக்கு பார்வை. இந்தியா, தனது நாகரிக விஷயங்களில் ஆழமாக வேரூன்றிய அதே வேளையில், தொழில்நுட்ப ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வலிமை பெற்று வருகிறது. 'நாரி சக்தி' எனும் பெண் சக்தி என்பது தேசத்தை கட்டமைப்பதில் மையமாக திகழ்கிறது. பெண்களின் தலைமைத்துவம் குடும்பங்களையும், சமூகங்களையும், நாட்டையும் வலுப்படுத்துகிறது. பசவலிங்க மஹாசுவாமிகள், இரக்கத்துக்கும், சேவைக்கும் அடையாளமாக திகழ்கிறார். 500க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஆதரவளித்து, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி அளிக்கும் வகையில், 60க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை உருவாக்கி உள்ளார். இவ்வாறு பேசினார்.
வேறுபாடு தெரியாத கார்கே
துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பேசுகையில், ''சில நேரங்களில் பயங்கரவாதிகளுக்கும், அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பவர்களுக்கும் உள்ள வேறுபாடு எனக்கு தெரிகிறது. ஆனால், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தெரிவதில்லை. மற்றபடி அவர் என்னுடைய மிக நல்ல நண்பர்,'' என்றார்.