உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சாலை பள்ளங்கள் உருவாவது இயற்கையானது

சாலை பள்ளங்கள் உருவாவது இயற்கையானது

பெங்களூரு: “பெங்களூரில் சாலைப் பள்ளங்கள் உருவாக வேண்டும் என யாரும் விரும்பமாட்டார்கள். அதிகமான வாகனங்களின் போக்குவரத்தாலும், கன மழையாலும் சாலையில் பள்ளங்கள் ஏற்படுவது இயற்கையானது,” என, பெங்களூரு நகர மேம்பாட்டுத் துறை அமைச்சரும், துணை முதல்வருமான சிவகுமார் தெரிவித்தார். பெங்களூரில் சாலைப் பள்ளங்கள் பிரச்னை, பெரும் தலைவலியாக மக்களை வாட்டுகிறது. பள்ளங்கள் இல்லாத சாலைகளே, பெங்களூரில் இல்லை. இது மக்களின் நடமாட்டத்துக்கு, இடையூறாக உள்ளது. விபத்துகளுக்கும் காரணமாகின்றன. மோசமான சாலைகளால், இங்குள்ள தொழிற்நிறுவனங்கள், அண்டை மாநிலமான ஆந்திராவுக்கு இடம் மாற விரும்புவதாக தகவல் வெளியானது. இதை தீவிரமாக கருதிய துணை முதல்வர் சிவகுமார், சாலைப் பள்ளங்களை மூடும்படி ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்துக்கு உத்தரவிட்டார். இதன்படி ஆங்காங்கே பணிகள் நடக்கின்றன. இதுகுறித்து, துணை முதல்வர் சிவகுமார் நேற்று அளித்த பேட்டி: பெங்களூரின் மேம்பாடு குறித்து, முதல்வர் சித்தராமையா நேற்று கூட ஆலோசனை நடத்தினார். சாலைப் பள்ளங்களை அடையாளம் கண்டு, அறிக்கை அளிக்கும்படி நகர போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டது. பொது மக்களும் சாலைப் பள்ளங்கள் குறித்து, எங்களுக்கு தகவல் தாருங்கள். பா.ஜ.,வினருக்கு அரசியல் செய்வதே, குறிக்கோளாக உள்ளது. இதை தவிர அவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது. அவர்கள் எதையோ செய்து கொள்ளட்டும். நாங்கள் பாரபட்சம் பார்க்காமல் பணியாற்றுகிறோம். அனைத்து கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்களுக்கும் சமமான நிதியுதவி வழங்குகிறோம். இதை பயன்படுத்தி, பணிகளை நடத்தட்டும். எம்.எல்.ஏ.,க்களுக்கு 25 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வளவு நிதி வழங்கியும், - பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள், சாலைப் பள்ளங்களை ஏன் மூடவில்லை? சாலைப் பள்ளங்களை நாங்கள் உருவாக்கவில்லை. பெங்களூரில் சாலைப் பள்ளங்கள் உருவாக வேண்டும் என யாரும் விரும்ப மாட்டார்கள். அதிகமான வாகனங்களின் போக்குவரத்தாலும், கன மழையாலும் சாலையில் பள்ளங்கள் ஏற்படுவது இயற்கையானது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே 7,000 பள்ளங்கள் மூடப்பட்டன. இன்னும் 5,000 பள்ளங்கள் மூட வேண்டியுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி