மேடையில் கண்ணீர் விட்டு அழுத காங்., - எம்.எல்.ஏ.,
சிக்கமகளூரில் அதிகளவு காபி தோட்டங்கள் உள்ளன. இங்கு யானைகள் நடமாட்டமும் அதிகளவு இருக்கிறது. சமீப நாட்களில், யானைகள் தாக்கியதால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காபி தோட்டங்களில் பணிபுரிபவர்கள், அவ்வப்போது போராட்டங்களிலும் ஈடுபடுகின்றனர். யானை தாக்குதலை வைத்து பா.ஜ.,- காங்கிரஸ் கட்சியினர் அரசியலும் செய்து வருகின்றனர். யானை தாக்குதலுக்கு நீங்கள் தான் பொறுப்பு என மாறி, மாறி குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டங்களும் நடத்தி வருகின்றனர். அவ்வகையில், சமீபத்தில் சிருங்கேரி பகுதியில், பா.ஜ., சார்பில் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., ஜீவராஜ் பேசுகையில்,'யானை தாக்குதலுக்கு மக்கள் பலியாவதற்கு முழு காரணமும், சிருங்கேரி தொகுதி காங்., - எம்.எல்.ஏ., ராஜேகவுடாவே. பல உயிர்கள் பலியாவதற்கு காரணமான கவுடாவுக்கு அடுத்த தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்' என்றார். இதற்கு எதிர்வினையாற்றும் வகையில், காங்கிரஸ் சார்பில்சிக்கமகளூரு மாவட்டத்தின் என்.ஆர்., புரா தாலுகாவில்நடந்த கட்சிக்கூட்டத்தில், எம்.எல்.ஏ., ராஜேகவுடா பங்கேற்றார். அவர் எதிர்க்கட்சியினரான பா.ஜ.,வையும், முன்னாள் எம்.எல்.ஏ., ஜீவராஜையும் எதிர்த்து ஆக்ரோஷமாக பேசினார். அப்போது, திடீரென உணர்ச்சிவசப்பட்டவர் மேடையிலே தேம்பி, தேம்பி அழத்துவங்கி விட்டார். இது, அங்கிருந்தவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர், சமாதானமாகி, 'நார்மல்' நிலைமைக்கு திரும்பினார். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. மேலும், ராஜேகவுடா பேசுகையில் முன்னாள் பா.ஜ., - எம்.எல்.ஏ., ஜீவராஜின் பெயரை குறிப்பிடாமல், அவர் மீது பகீரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: உங்களுக்கு மானம், மரியாதை இருந்தால், அடுத்த சட்டசபை தேர்தலில் நீங்கள் போட்டியிடக்கூடாது. ஒரு வேளை, அப்படி நீங்கள் அறிவித்து விட்டால், நானும் அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அறிவிக்கிறேன். நீங்க என் வீட்டையே அழிச்சிட்டீங்க. என் குடும்பம் தெருவுக்கு வந்துவிட்டது. நான் தினமும் நீதிமன்றத்தின் படிக்கட்டுகளை ஏறி, இறங்கும் நிலைமைக்கு வந்துவிட்டேன். நான் கடன் வாங்கி, மக்களுக்கு நன்மை தான் செய்து உள்ளேன். அவர் மீண்டும் எம்.எல்.ஏ., ஆகிவிட்டால் தொகுதியில் இருக்கும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவதே கடினமாகிவிடும். அவர் ஒரு போதும் எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்படக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார். - நமது நிருபர் -: