கே.ஆர்.மார்க்கெட்டை பராமரிக்க வேண்டும்! ஜி.பி.ஏ., தலைமை கமிஷனர் அதிரடி கண்டிப்பு
பெங்களூரு: கே.ஆர்.மார்க்கெட் துாய்மையாக இல்லாததை பார்த்து, ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணைய தலைமை கமிஷனர் மஹேஸ்வர் ராவ், அதிகாரிகள், வியாபாரிகளை கண்டித்தார். பெங்களூரின், கே.ஆர்.மார்க்கெட் பகுதியை, ஜி.பி.ஏ., தலைமை கமிஷனர் மஹேஸ்வர் ராவ், நேற்று காலை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். மார்க்கெட் பகுதியில் ஆங்காங்கே, குப்பை குவிந்து அசுத்தமாக இருப்பதை பார்த்து அதிருப்தி அடைந்தார். “மார்க்கெட்டை தினமும் 24 மணி நேரமும், துாய்மையாக வைத்திருக்க வேண்டும். எந்த இடத்திலும் குப்பை தென்பட கூடாது,” என, எச்சரித்தார். “கே.ஆர்.மார்க்கெட்டில், ஜி.பி.ஏ.,வுக்கு சொந்தமாக எத்தனை கடைகள் உள்ளன? எந்தெந்த கடைகள் வாடகை பாக்கி வைத்துள்ளன?” என்ற விபரங்களை அவர் கேட்டறிந்தார். அப்போது அதிகாரிகள், 'தரைத்தளத்தில் 529 கடைகள், முதல் மாடியில் 494 கடைகள், இரண்டாவது மாடியில் 265 கடைகள் உள்ளன. சில கடைகளின் வாடகை பாக்கி குறித்து, நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது' என்றனர். தலைமை கமிஷனர் கூறியதாவது: விரைவில் வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்து, வாடகை பாக்கியை வசூலிக்க வேண்டும். மார்க்கெட்டை துாய்மையாக வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு கடை முன்பாகவும், குப்பையை போட கூடைகள் வைக்க வேண்டும். கண்ட இடங்களில் குப்பையை போடுவோரை, மார்ஷல்கள் கண்காணிக்க வேண்டும். குப்பை போடுவோரிடம் அபராதம் விதித்து, நிர்ணயித்த இடத்திலேயே குப்பையை போடும்படி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கடைகளுக்கு அளித்துள்ள இடத்தில் மட்டுமே, வியாபாரம் செய்ய வேண்டும். கூடுதல் இடத்தை ஆக்கிரமித்து, வியாபாரம் செய்வோருக்கு அபராதம் விதிக்க வேண்டும். ஆக்கிரமிப்பை அகற்றுங்கள். மீண்டும் ஆக்கிரமித்தால், சட்டப்படி நடவடிக்கை எடுங்கள். மார்க்கெட் வளாகத்தில், படிகளின் அருகில் உள்ள கிரானைட்ஸ் பாழாகியுள்ளது. அதை சரி செய்யுங்கள். ரூப் ஷீட் பாழானதால், தண்ணீர் கசிந்து வியாபாரிகள், பொது மக்கள் பாதிப்படைகின்றனர். உடனடியாக அதை சரி செய்யுங்கள். மார்க்கெட்டில் தண்ணீர் தேங்காமல், பார்த்துக் கொள்ளுங்கள். மார்க்கெட்டின் முதல் மாடியில் உள்ள கழிப்பறை, மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பயன்படுத்த தகுதியாக இல்லை. இதன் பக்கத்தில் உள்ள காலியிடத்தில், புதிதாக கழிப்பறை கட்டுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.