உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மாலுாரில் குப்பைகளை அகற்றாததால் சுகாதார சீர்கேடு

 மாலுாரில் குப்பைகளை அகற்றாததால் சுகாதார சீர்கேடு

மாலுார்: மாலுாரில் குப்பை அகற்றும் பிரிவு செயல்பட்டு வந்தாலும், குப்பை பிரச்னைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. அதனால், நகரின் சாலைகளில் குப்பைகள் குவிந்து, துர்நாற்றம் வீசுகிறது; சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. கோலார் மாவட்டம் மாலுார் நகரின் குப்பைகளை குவிக்க, ஹொரஹள்ளி கிராமத்திற்கு அருகே இரண்டு ஏக்கர் பரப்பளவில், குப்பை கிடங்கு தொடங்கப்பட்டது. ஆனால், கிராம மக்களின் எதிர்ப்பால் அங்கு குப்பைகளை கொட்டுவது கைவிடப்பட்டது. இதையடுத்து, மாலுார் நகரின் பாழுங் கிணறுகள், கல் குவாரிகளில் குப்பைகளை கொட்டுகின்றனர். கடந்த, 2024 ஆகஸ்டில், மாலுாரின் தொட்ட இக்கலுார் கிராமத்திற்கு அருகே, 5 ஏக்கரில், நகர்ப்புற மேம்பாட்டு துறை, டவுன் சபை, நகர நிர்வாக இயக்குனரகம் போன்றவை இணைந்து, 6 கோடி ரூபாய் செலவில் திடக்கழிவு அகற்றல் மற்றும் மேலாண்மை பிரிவை துவக்கின. இதனால், குப்பை பிரச்னை தீர்ந்து விடும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், திடக்கழிவு மேலாண்மை நிலையம் திறக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும், குப்பைகளை முறையாக அகற்றப்படவில்லை. மாலுாரில் பல தொழிற்சாலைகள் உருவாகி, ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். ஆனால், டவுன் சபை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அலட்சியத்தால் குப்பைகளை முறையாக அகற்றாததால், மக்கள் தொடர்ந்து பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். அத்துடன், குப்பை சேகரிக்க, 31 வார்டுகளிலும் வாகன வசதியும் இல்லை. ஒவ்வொரு வார்டிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் சேமிக்கப்பட்டு, இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பிறகு தான், டிராக்டர் மூலம் அகற்றும் பிரிவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. மாலுாரில் தினமும், 25 முதல் 30 டன் குப்பைகள் குவிகின்றன. அதில், 15 முதல், 16 டன் வரையிலான ஈர குப்பைகளை இயந்திரம் மூலம் அகற்றும் பணி மிகவும் மந்தமாக நடைபெறுகிறது. இதனால், துர்நாற்றம் வீசுவதோடு, சுற்றுப்புற சூழலும் பாதிக்கிறது என்று மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். நகராட்சி ஒவ்வொரு வார்டுக்கும் குப்பை லாரிகளை அனுப்பினாலும், குப்பைகளை லாரிகளில் கொட்டுவதற்கு பதிலாக, மக்களும் சாலை ஓரத்திலேயே கொட்டுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ