உண்டியல் பணத்தை திருடிய நபருக்கு வலை
சாம்ராஜ்நகர்: தொம்மலாபுரா கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பட்டதராணி கோவிலில் நுழைந்த நபர், அம்பாளை வணங்கி விட்டு உண்டியல் பணத்தை திருடி சென்ற வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டுலுபேட் தாலுகாவின் தொம்மலாபுரா கிராமத்தில் உள்ளது பட்டணராணி கோவில். இது, பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலாகும். தினமும் பெருமளவில் பக்தர்கள் வருகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு, கோவில் அருகே வந்த நபர், போர்வையால் உடலை மூடியிருந்தார். முதலில் அம்பாளை கைகூப்பி வணங்கினார். நெற்றியில் குங்குமத்தை வைத்துக் கொண்டார். அதன் பின் கதவில் தொங்க விட்டிருந்த உண்டியலின் பூட்டை உடைத்து, பணத்தை எடுத்து பையில் நிரப்பி கொண்டு தப்பியோடினார். காலையில் அர்ச்சகர் பூஜை செய்ய வந்த போது, திருட்டு நடந்திருப்பது தெரியந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த குண்டுலுபேட் போலீசார், கண்காணிப்பு கேமராவில் பார்த்த போது, போர்வையணிந்து வந்து திருடிய நபரின் செயல்கள் பதிவாகி இருந்தன. அவரது முகம் அடையாளம் தெரிந்துள்ளது. அவரை தீவிரமாக தேடுகின்றனர். இக்கோவிலில் இதற்கு முன்னரும் திருட்டு நடந்தது. அதன்பின் கோவில் நிர்வாகத்தினர், பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமரா பொருத்தினர்.