மேலும் செய்திகள்
செல்வாக்கை உயர்த்தி கொள்ள சித்தராமையா ஆர்வம்
06-Aug-2025
சில மாதங்களாக ஓய்ந்திருந்த 'தலித் முதல்வர்' கோஷம் மீண்டும் எழ துவங்கி உள்ளதால், காங்கிரஸ் தலைமை நொந்து போயுள்ளது. கர்நாடகாவில் சித்தராமையாவும், சிவகுமாரும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வராக இருப்பது என்ற 'ரகசிய' ஒப்பந்தம் இருப்பதாக கூறப்பட்டது. அப்போதே தலித் முதல்வர் கோஷம் எழுந்தது. பரமேஸ்வர், மல்லிகார்ஜுன கார்கேவும் கூட காய் நகர்த்தி வந்தனர். ஆனால் சித்தராமையாவுக்கு ராகுலின் ஆதரவு இருந்ததால், அனைவரும் அடக்கி வாசித்தனர். தலித் முதல்வர் கோஷம், நீறுபூத்த நெருப்பு போல நீடித்தே வந்தது. இந்நிலையில், 2023ல் தாவணகெரேயில் சித்தராமையாவின் 75வது பிறந்த நாளை ஒட்டி, அவரது ஆதரவாளர்கள் 'சித்தராமோத்சவம்' நடத்தினர். அதுபோன்று பரமேஸ்வர் ஆதரவர்களும் நடத்த திட்டமிட்டனர். ஆனால், அதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த இடம் தான் வில்லங்கமானது. தலித் முதல்வர் சித்தராமையாவின் சொந்த மாவட்டமான மைசூரில் நேற்று முன்தினம் நடத்தினர். இதற்கு பல தரப்பில் இருந்து முட்டுக்கட்டை வந்தபோதும், வெற்றிகரமாக நடத்திக் காட்டினர். பல மடாதிபதிகள், தலித் அமைப்பினர் பங்கேற்றனர். அதில் பேசிய பலரும், தலித் முதல்வர் குறிப்பாக பரமேஸ்வரை முதல்வராக்க வேண்டும் என, அனைவரும் வலியுறுத்தினர். மடாதிபதிகள் பேசுகையில், 'நாட்டில் நம்மவர்கள் தான் அதிகளவில் இருக்கிறோம். இந்தியாவில் உள்ள தீண்டாமை குறித்து வெளிநாட்டில் பேசுகின்றனர். வேறு எந்த நாட்டிலும் காணாத தீண்டாமை, நம் நாட்டில் உள்ளது. தலித்களுக்கு அமைதியான, திருப்தியான வாழ்க்கை கிடைக்கவில்லை. சமத்துவம், சுயமரியாதை வாழ்க்கைக்காக, நாம் இன்னும் எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும்?' என கேள்வி எழுப்பினர். இதன் மூலம், இந்தாண்டு இறுதியில் முதல்வர் மாற்றத்தில், தன்னையும் பரிசீலிக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டவே பரமேஸ்வர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றதாக கட்சி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த அனைத்து விவகாரங்களும் மேலிடத்தின் காதுகளையும் எட்டின. மீண்டும் கோஷம் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக, மீண்டும் தலித் முதல்வர் கோஷம் எழுந்துள்ளதால், கட்சிக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. பரமேஸ்வரை தொடர்பு கொண்ட கட்சி மேலிடம், 'ஏற்கனவே ஆர்.சி.பி., கொண்டாட்ட சம்பவம்; ஓட்டுத் திருட்டு 'பூமராங்' ஆகி உள்ளது; தர்மஸ்தலா வழக்கு என தொடர்ந்து கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது. பல மாநிலங்களில் ராகுல் போராட்டங்கள் செய்து வருகிறார். இவ்வேளையில், மீண்டும் தலித் முதல்வர் என்ற கோஷத்தை எழுப்பி உள்ளீர்கள். இது கட்சிக்கு மேலும் சங்கடத்தை ஏற்படுத்தும். எனவே, அடக்கி வாசியுங்கள்' என, கட்சி மேலிடம் அறிவுறுத்தி உள்ளது. இதை கேட்ட பரமேஸ்வர், ஒவ்வொரு முறையும் ஏதாவது ரூபத்தில் தனக்கு முட்டுக்கட்டை வருகிறதே என, உள்ளுக்குள் குமுறி வருகிறார். - நமது நிருபர் -
06-Aug-2025