விநாயகர் ஊர்வலங்களில் தாக்குதல் நடத்துவோர் மீது புல்டோசர் ஏற்றப்படும் எம்.எல்.ஏ., எத்னால் சர்ச்சை பேச்சு
மாண்டியா: ''கர்நாடகாவில், 2028ல் ஹிந்துக்களுக்கு ஆதரவான அரசு அமையும்; விநாயகர் ஊர்வலத்தில் தாக்குதல் நடத்துவோர் மீதுபுல்டோசர் ஏற்றப்படும்,'' என, எத்னால் கருத்து தெரிவித்து உள்ளார். பா.ஜ.,விலிருந்து நீக்கப்பட்ட விஜயப்புரா தொகுதிஎம்.எல்.ஏ.,வான பசனகவுடா பாட்டீல் எத்னால் பேசியதாவது: கர்நாடகாவின் மத்தூரில் ஒரு புதிய புரட்சி தொடங்கி உள்ளது. நான் சாம்ராஜ்நகரில் இருந்து பசவ கல்யாண் வரை சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். அடுத்த சட்டசபை தேர்தலில், கர்நாடகாவில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும். ஹிந்துக்களுக்கான அரசு அமையும். அப்போது, ஹிந்துத்துவா அமைப்பினருக்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்த வழக்குகள் ரத்து செய்யப்படும். வரும், 2028ல் ஹிந்துக்களுக்கு ஆதரவான அரசு நிச்சயம் அமையும். அப்போது, கடுமையான நடவடிக்கைகள் மாநிலத்தில்பின்பற்றப்படும். விநாயகர் ஊர்வலங்களின் போது தாக்குதல் நடத்துவோர் மீது, புல்டோசர் ஏற்றப்படும். பாகிஸ்தான் ஆதரவு கோஷங்கள் எழுப்புவோருக்கு எதிராக துப்பாக்கியே பேசும். காந்தி, நேரு ஆகியோரின் தசாப்தங்கள் முடிந்து விட்டன. தாஜ்மஹாலை கட்டியவர்கள் நாயகர்களாக பாவிக்கப்படுகின்றனர். கம்யூனிஸ்டுகள் தங்கள் விருப்பப்படி வரலாற்றை திரித்து எழுதிக் கொள்கின்றனர். நம் உடலில் ஓடுவது அடிமைகளின் ரத்தம் இல்லை. தந்தை பெயரை அறியாதவர்களே தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று கூறிக்கொள்கின்றனர். நாங்கள் தாய், தந்தை இருவர் பெயரையும் அறிவோம். எனவே, நாங்கள் மதச்சார்பற்றவர்கள் கிடையாது. சமூகத்தில் இருந்து சாதியை ஒழித்து, மதங்களை ஒன்றிணைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.