ஒன்பது மாத குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி
பெங்களூரு: சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் கொரோனா பரவியதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது கேரளா, மஹாராஷ்டிரா உட்பட சில மாநிலங்களில் பரவியுள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக கடந்த 19ம் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார். அதே தேதியில், தேசிய அளவில் 257 பேர் கொரோனா வழக்குகள் பதிவாகி இருந்தன.இது மக்களிடையே பீதியை ஏற்படுத்திய நிலையில், நேற்று பெங்களூரில் ஒன்பது மாத குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பெங்களூரு ரூரல், ஹொஸ்கோட் பகுதியை சேர்ந்த ஒன்பது மாத ஆண் குழந்தை, காய்ச்சல் காரணமாக அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து, கலாசிபாளையாவில் உள்ள வாணி விலாஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. அப்போது, குழந்தைக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது' என்றனர்.சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலர் ஹர்ஷா குப்தா கூறுகையில், ''குழந்தைக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது. இதில், தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. குழந்தை நலமுடன் இருக்கிறது. இதனால், யாரும் பீதி அடைய வேண்டாம்,'' என்றார்.