உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தெருநாய்க்கு உணவு வழங்க இடம் தேடும் அதிகாரிகள்

தெருநாய்க்கு உணவு வழங்க இடம் தேடும் அதிகாரிகள்

பெங்களூரு: தெருநாய்களுக்கு உணவு வழங்கும் இடங்களை அடையாளம் காணும் பணியை பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர். பெங்களூரில் தெருநாய்கள் சிறுவர், சிறுமியரை கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தெருநாய்களுக்கு சிக்கன் கலந்த உணவை அளிக்க திட்டமிட்டது. இதற்காக, 2.88 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கு மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நாய்களுக்கு உணவளிக்க, கோடிகளில் செலவிடுவதா எனவும் கேள்விகள் எழுந்தன. இந்நிலையில், தெருநாய்களுக்கு பொது இடங்களில் உணவு அளிப்பதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. நாய்களுக்கு உணவு அளிக்க தனியாக இடங்களை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என, சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து, நாய்களுக்கு உணவு அளிப்பதற்கான இடங்களை தேர்வு செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தெரு நாய்களுக்கு உணவு அளிக்கும் இடங்களை அதிகாரிகள் அடையாளம் கண்டு வருகின்றனர். 15 முதல் 20 நாட்களுக்குள் இடங்கள் தேர்வு செய்யப்படும் என தெரிகிறது. பெங்களூரில் 2023ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 2.79 லட்சம் தெருநாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டது. அதிகபட்சமாக மஹாதேவபுராவில் 58,371 தெருநாய்கள் இருந்தன. கணக்கெடுப்பு நடந்து முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது நாய்களின் எண்ணிக்கை, பல மடங்கு அதிகரித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இத்தனை நாய்களுக்கும் மாநகராட்சியால் உணவு அளிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி