இன்ஸ்டா பிரபலம் துருவ் நாயக் மீது ஆம்னி பஸ் ஊழியர்கள் தாக்குதல்
உப்பார்பேட்: பஸ் டிரைவரிடம் தகராறு செய்ததால், இன்ஸ்டாகிராம் பிரபலம் துருவ் நாயக்கை, ஆம்னி பஸ் ஊழியர்கள் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.ஹூப்பள்ளியை சேர்ந்தவர் துருவ் நாயக், 28. இன்ஸ்டாகிராம் பிரபலம்.கடந்த 1ம் தேதி இரவு பெங்களூரில் இருந்து ஹூப்பள்ளி செல்ல, ஆம்னி பஸ்சில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார்.ஆனந்த்ராவ் சதுக்கம் அருகே பஸ் வந்ததும் பேக்கை, தனக்கு ஒதுக்கப்பட்ட சீட்டில் வைத்தார். வெளியே வந்து சிகரெட் புகைத்தார்.பஸ் புறப்படும் நேரம் ஆனதால், டிரைவர் படிக்கட்டு கதவை அடைத்துவிட்டு, பஸ்சை முன்நோக்கி இயக்கினார். அப்போது கதவை தட்டிய துருவ் நாயக், 'நான் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளேன்.நான் ஏறாமல் பஸ்சை எப்படி எடுப்பீர்கள்?' என, டிரைவரிடம் தகராறு செய்துள்ளார்.பஸ் அருகில் வந்த, பஸ் நிறுவன ஊழியர்கள், துருவ் நாயக்கிடம் தகராறு செய்து, இரும்புக் கம்பியால் தாக்கி உள்ளனர். இதில் துருவ் நாயக் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின், பஸ்சுக்குள் ஏறி தனது பேக்கை எடுத்துவிட்டு வெளியே வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், நேற்று முன்தினம் இரவு ஆம்னி பஸ் ஊழியர்கள் மீது, உப்பார்பேட் போலீசில் புகார் செய்தார்.தன்னை தாக்கியதுடன், பேக்கில் இருந்த 44,000 ரூபாய் மதிப்பிலான கூலிங் கிளாஸ், 45,000 ரூபாய் மதிப்பிலான கைக்கடிகாரம், 40,000 ரூபாய் மதிப்பிலான சில்வர் செயின், 10,000 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை ஆம்னி பஸ் ஊழியர்கள் திருடியதாக புகாரில் குறிப்பிட்டு உள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.