உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சாலை பணிகளுக்காக 560 மரங்கள் வெட்ட திட்டம்

 சாலை பணிகளுக்காக 560 மரங்கள் வெட்ட திட்டம்

மைசூரு: 'மைசூரில் உள்ள ஐந்து வெவ்வேறு திட்டங்களுக்காக 560 மரங்களை வெட்டுவது குறித்து ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் இன்று மாலை 5:30 மணிக்குள் gmail.comஎன்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்,' என, வனத்துறை தெரிவித்துள்ளது. மைசூரில் ஐந்து வெவ்வேறு திட்டங்களுக்காக 560 மரங்களை அகற்ற முன்மொழிந்துள்ளனர். இந்த மரங்களை அகற்றுவதற்கு அனுமதி கோரி, வனத்துறை அதிகாரிகளுக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர். பெங்களூரு - மைசூரு விரைவுச்சாலையில் ரிங் ரோடு சந்திப்பில் 63.67 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் கூடுதல் பணிகளுக்காக, மூன்று சந்தன மரங்கள் உட்பட 350 மரங்களை அகற்ற நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. இதுதவிர 26.66 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேலும் நான்கு திட்டங்களுக்கான 210 மரங்களை அகற்றவும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் வனத்துறையிடம் அனுமதி கோரியுள்ளனர். மொத்தம் 560 மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அளிப்பது குறித்து 1976ம் ஆண்டு கர்நாடக மரங்கள் பாதுகாப்பு சட்டத்தின்படி, ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், இன்று மாலை 5:30 மணிக்குள் gmail.comஎன்ற மின்னஞ்சலுக்கு அனுப்பும்படி வனத்துறை அறிவித்துள்ளது. ஆட்சேபனை குறித்த கடிதத்தை ஆட்சேபனைப் பெட்டியில் போடலாம் அல்லது வன அலுவலர், ஆர்.எப்.ஓ., மைசூரு மண்டலப் பிரிவு, ஆரண்ய பவன், அசோகபுரம், மைசூரு - 570028 என்ற முகவரிக்கு எழுதலாம். பொதுமக்கள் ஆட்சேபனைகள் தெரிவிப்பது தொடர்பான அறிவிப்பு ஏப்ரல் 27ல் வெளியிடப்பட்டது. குறைந்தபட்சம் 15 நாட்களாவது அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து துணை வனத்துறை அதிகாரி கே. பரமேஷா கூறுகையில், “தேவைப்பட்டால் மீண்டும் நீட்டிக்கப்படும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !