உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  எங்களுக்கு பெண் தேடி தாருங்கள்; மாற்றுத்திறனாளிகள் வேண்டுகோள்

 எங்களுக்கு பெண் தேடி தாருங்கள்; மாற்றுத்திறனாளிகள் வேண்டுகோள்

பெங்களூரு: மாற்றுத்திறனாளிகளுக்கான சஹாயவாணி உதவி எண்ணில், தொடர்பு கொள்ளும் பலரும், தங்களின் திருமணத்துக்கு பெண் தேடித் தரும்படி மன்றாடுவதால், மையத்தின் ஊழியர்கள் தர்ம சங்கடத்தில் சிக்கியுள்ளனர். விவசாயிகள், புரோகிதர்கள், சமையல் வேலை செய்யும் ஆண்களுக்கு, திருமணத்துக்கு பெண் கிடைப்பது இல்லை. அனைத்து சமுதாயங்களிலும், மணமகள் பற்றாக்குறை உள்ளது. விவசாயிகளுடன் அதிகாரிகள், ஆலோசனை கூட்டம் நடத்தும் போது, தங்களை திருமணம் செய்து கொள்ள பெண்கள் முன் வராதது குறித்து, விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். பெண் கிடைக்காமல் பரிதவிக்கும் விவசாயிகள், புரோகிதர்கள், சமையல்காரர்கள் வரிசையில், தற்போது மாற்றுத்திறனாளிகளும் சேர்ந்துள்ளனர். பெங்களூரு ரூரல் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக சஹாயவாணி மையம் உள்ளது. பிரச்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகள், இந்த மையத்தில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். ஆனால் சமீப நாட்களாக, இந்த எண்ணில் தொடர்பு கொள்ளும் பலர், திருமணத்துக்கு பெண் தேடி தரும்படி வேண்டுகின்றனர். இந்த உதவி எண்ணில் தொடர்பு கொள்ளும் மாற்றுத்திறனாளி ஆண்கள், 'எங்களுக்கு நல்ல வேலை, வருவாய், வீடு, சொத்துகள் இருந்தாலும், நாங்கள் மாற்றுத்திறனாளிகள் என்பதால், எங்களுக்கு பெண் கொடுக்க, யாரும் முன் வருவது இல்லை. 'எங்களை திருமணம் செய்து கொள்ள, பெண்களும் மறுக்கின்றனர். பெண் தேடி தேடி, ஆண்டுகள் ஓடுகின்றனவே தவிர, திருமணம் ஆகவில்லை. தயவு செய்து பெண் தேடி தாருங்கள்' என வேண்டுகின்றனர். தங்களை திருமணம் செய்ய முன் வரும் பெண்ணுக்கு, தங்களின் அனைத்து சொத்துகளையும் எழுதி வைக்கவும், சிலர் தயாராக உள்ளதாக கூறுகின்றனர். இவர்களுக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் ஊழியர்கள் கையை பிசைகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ