குமாரசாமி இல்லாமல் திணறும் ம.ஜ.த.,
- நமது நிருபர் -கர்நாடகாவில் பலமான மாநில கட்சியாக ம.ஜ.த., இருந்தது. தற்போது, கட்சி தொண்டர்களை வழிநடத்தி செல்ல வலுவான தலைவர் இல்லாததால், வளர்ச்சி என்பதை பார்க்க முடியவில்லை. கர்நாடகாவின் அரசியல் வரலாற்றில், ம.ஜ.த., தவிர்க்க முடியாத கட்சியாக இருந்தது. இக்கட்சியின் முதல்வர்களாக தேவகவுடா, குமாரசாமி ஆகியோர் இருந்தனர். மக்கள் மனதில் இவர்களை தவிர, எம்.பி.பிரகாஷ், ஜி.டி.தேவகவுடா, எச்.டி.ரேவண்ணா, இப்ராஹிம் உட்பட பல அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்கள் இருந்தனர். பிரகாஷ் காலமாகி விட்டார். இருக்கும் தலைவர்களில் கட்சி பணிகளில் ஈடுபட யாரும் ஆர்வம் காட்டவில்லை.பா.ஜ.,வுடன் முதன் முறையாக ம.ஜ.த., கூட்டணி அமைத்தது. அப்போது, குமாரசாமி மாநில முதல்வரானார். இவரின் பதவி காலத்தில் கட்சி தொண்டர்கள் உற்சாகத்துடன் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அவரும் தொண்டர்கள் மட்டுமின்றி, சாதாரண மக்களின் வீடுகளில் தங்கி, அடிமட்ட மக்களின் மனதில் இடம் பிடித்தார். பா.ஜ.,வுடனான கூட்டணியை முறித்த போது, அதிருப்தி எழுந்தாலும், கட்சி தொண்டர்களிடம் உற்சாகம் குறையவில்லை. குமாரசாமி மீது அசைக்க முடியாக நம்பிக்கை வைத்திருந்தனர். வளர்ச்சி பூஜ்யம் இரண்டாவது முறையாக பா.ஜ.,வுடன் ம.ஜ.த., நெருக்கமாக இருக்கும் போது, கட்சிக்குள் இருந்த பெரும்பாலான சிறுபான்மையினர், அக்கட்சியில் இருந்து விலகி, காங்கிரசில் இணைந்தனர். மாநில தலைவராக இருந்த இப்ராஹிமும் போர்க்கொடி உயர்த்தினார். இதனால், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மூன்றாவது முறையாக மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்ததும், கூட்டணியில் இடம் பெற்றிருந்த குமாரசாமி மத்திய அமைச்சராக்கப்பட்டார். இதனால், தொடர்ந்து டில்லியில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாநிலத்துக்கு அவ்வப்போது வந்த போதும், தனது துறை சம்பந்தமான விஷயங்களில் மட்டுமே, அவரால் கவனம் செலுத்த முடிகிறது. கட்சியை வளர்ப்பதில் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால், கட்சி பொறுப்பை, மகன் நிகில் குமாரசாமியிடம் ஒப்படைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இருப்பினும், மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கட்சியை வலுப்படுத்தி வருகிறார், நிகில். பெலகாவியில் நடந்து வரும் குளிர்கால கூட்டத்தொடரில், சட்டசபை ம.ஜ.த., தலைவராக சுரேஷ் பாபு நியமிக்கப்பட்டார். ஆனால், அவரின் தலைமையின் கீழ் அக்கட்சி உறுப்பினர்களால், ஆளுங்கட்சிக்கு எதிராக வலுவான வாதங்களை எடுத்து வைக்க முடிவதில்லை. கட்சியின் தற்போதைய நிலையை எண்ணி, அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் வேதனையில் உள்ளனர். இதை கட்சி தலைவர்களிடம் கூறவும் தயங்குகின்றனர். இதுகுறித்து ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் கூறுகையில், 'சட்டசபையில் குமாரசாமி இல்லை என்றாலும், சிறிய விஷயமாக இருந்தாலும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்குகிறார். குமாரசாமிக்கு நிகர், குமாரசாமியே தான். அந்த இடத்தை வேறு யாராலும் நிவர்த்தி செய்ய முடியாது. தினமும் சட்டசபை, மேல்சபையில் நடக்கும் கூட்டங்கள் குறித்து அவரிடம் தெரிவித்து வருகிறோம். 'முன்னர், கர்நாடகாவின் வடமாவட்டங்களில் ம.ஜ.த.,வுக்கு அதிக வெற்றி கிடைத்தது. இப்போது குறைந்துள்ளது. நடப்பு கூட்டத்தொடரில், குமாரசாமி எங்களுடன் இல்லாதது வருத்தம் அளிக்கிறது' என்றனர்.