கைதிகளுக்கு போதை பரிசோதனை சிறைத்துறை டி.ஜி.பி., முடிவு
பெங்களூரு: சிறைகளில் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்கும் வகையில், கைதிகளுக்கு பரிசோதனை நடத்த, சிறைத்துறை டி.ஜி.பி., அலோக் குமார் முடிவு செய்துள்ளார். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா, கலபுரகி, பல்லாரி மத்திய சிறைகளில், கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. சிறையில் நடக்கும் சட்டவிரோதங்களை தடுக்க, சிறைத்துறை டி.ஜி.பி., அலோக் குமார் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, சிறைக்குள் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்கும் வகையில், கைதிகளுக்கு அடிக்கடி போதைப்பொருள் உட்கொண்டது தொடர்பான பரிசோதனை நடத்த, அலோக் குமார் முடிவு செய்து உள்ளார். இதற்கான முதற்கட்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. உடல் பரிசோதனையின் போது, கைதிகள் யாராவது போதைப்பொருள் உட்கொண்டது தெரியவந்தால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படாது என்றும், மாறாக அவர்களை கவுன்சிலிங்கிற்கு அனுப்பி, போதைப்பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கம் அளிக்க உள்ளதாகவும், சிறை துறை அதிகாரிகள் கூறி உள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன், பரப்பன அக்ரஹாரா சிறைக்குள், கஞ்சா எடுத்து சென்ற வார்டன் கைதாகிய நிலையில், போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க, டி.ஜி.பி., புதிய முயற்சி எடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.