ஆப்பரேஷன் சிந்துார் பெயருக்கு மவுசு பதிவு செய்ய தயாரிப்பாளர்கள் போட்டி
பெங்களூரு: ஆப்பரேஷன் சிந்துார்' பெயரில், பாகிஸ்தான் மீது இந்தியா நடத்தும் யுத்தம் சூடு பிடித்துள்ளது.இதற்கிடையே 'ஆப்பரேஷன் சிந்துார்' பெயரில், திரைப்படம் தயாரிக்க தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த பெயரை பதிவு செய்து கொள்ள முட்டி மோதுகின்றனர்.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது நம் படைகள் தாக்குதல் நடத்தின.இதையடுத்து தொடர்ந்து நம் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை முப்படையினரும் சமாளித்து, அந்நாட்டின் மீது சரமாரி தாக்குதலை தொடுத்து வருகின்றனர்.இதனால் 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயர், சர்வதேச அளவில் பிரபலமடைந்துள்ளது. சிந்துார் என்ற வார்த்தை தியாகம் மற்றும் பராக்கிரமத்தின் அடையாளம்.பல சுமங்கலி பெண்களின் நெற்றி குங்குமத்தை அழித்த பயங்கரவாதிகளுக்கு, பாடம் கற்பிக்க வேண்டும் என்பதாலும், அதிரடி தாக்குதலுக்கு மத்திய அரசு, 'ஆப்பரேஷன் சிந்துார்' என, பெயர் சூட்டியது.இதற்கிடையில், 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் திரைப்படம், டாக்குமென்டரி படம், வெப் சீரீஸ் தயாரிக்க, பலரும் திட்டமிடுகின்றனர்.இந்த பெயரை பதிவு செய்து கொள்ள, தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்கின்றனர்.மற்றொரு புறம், பாகல்கோட் மாவட்டம், ரபகவி - பனஹட்டி தாலுகாவில், 'சிந்துார்' என்ற பெயரில் சேலைகள் தயாராகி, விற்பனைக்கு வந்துள்ளன. ஒரு சேலையின் விலை, 600 முதல் 800 ரூபாய் வரை விற்கப்படுகிறது.