மல்லேஸ்வரம் பூங்காவில் காதல் ஜோடி அநாகரீகம்
மல்லேஸ்வரம்: மல்லேஸ்வரம் பூங்காவில் அநாகரீகமாக நடந்து கொண்ட காதல் ஜோடி மீது நடவடிக்கை எடுக்கும்படி, போலீசாரை உள்ளூர்வாசிகள் வலியுறுத்தி உள்ளனர். ஐ.டி., நகரம், சிலிக்கான் சிட்டி என அழைக்கப்பட்ட பெங்களூரு, தற்போது காதலர்களின் நகரம் என்று அழைக்கும் அளவிற்கு நிலைமை மாறி உள்ளது. பூங்கா, தியேட்டர், மால், பஸ், மெட்ரோ ரயில் நிலையம் என எங்கு பார்த்தாலும் காதலர்களின் 'அட்ராசிட்டி' தாங்க முடியவில்லை. பொது இடங்களிலே எல்லை மீறி அநாகரீகமாக நடந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர்கள் நடந்து கொள்வது குறித்த வீடியோக்கள் இணையத்தில் பரவுவதும் வழக்கமாக உள்ளது. அவ்வகையில், மல்லேஸ்வரத்தில் உள்ள மாநகராட்சி பூங்காவில் உள்ள இருக்கையில் காதலர்கள் பட்டப்பகலில் அநாகரீகமாக நடந்து கொள்ளும் வீடியோ 'இன்ஸ்டாகிராமில்' வெளியாகி உள்ளது. இதற்கு உள்ளூர்வாசிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது போன்ற செயல்களால் தங்கள் குழந்தைகள் கெட்டுப் போகும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.