புதிய வேலை உறுதி திட்டம் செயல்படுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.20,000 கோடி தேவை
பெங்களூரு: ''மத்திய அரசின் புதிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை ஐந்து ஆண்டுகள் செயல்படுத்த 20,000 கோடி ரூபாய் செலவிட வேண்டும்,'' என மாநில கிராம பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்து உள்ளார். இது குறித்து நேற்று அவர் அளித்த பேட்டி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், 'வி.பி.,- ஜி ராம் -ஜி' என பெயர் மாற்றம் செய்ததாக மத்திய அரசு அறிவித்தது. இந்த புதிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை ஐந்து ஆண்டுகள் செயல்படுத்த 20,000 கோடி ரூபாய் செலவிட வேண்டும். இது மாநிலத்துக்கு தேவையற்ற நிதி சுமையை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசு 4,000 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும். இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தும் போது மத்திய அரசு, மாநில அரசிடம் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். வளர்ந்த இந்தியா என்ற கனவை நனவாக்க கன்னடர்கள் உழைக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. ஆனால், எங்களுக்கு என்ன கிடைக்கும். எங்களுக்கு வெறும் பாத்திரம் தான் கிடைக்கும். இத்திட்டம் மூலம் பலரது வேலை பறிபோகும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மூலம் கர்நாடகாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 80 லட்சம் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் கிட்டியது. புதிய திட்டத்தால் பலருக்கும் 60 நாட்களுக்கு எந்த வேலையும் இருக்காது. விவசாய நிலங்களில் வேலை பார்க்கும் கூலி தொழிலாளராக மாற்றப்படுவர். இது பண்ணையாரிடம் வேலை செய்வது போன்ற பிம்பத்தை உருவாக்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.