உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பள்ளிகளில் விளையாட்டு நேரத்தை குறைக்க கூடாது

பள்ளிகளில் விளையாட்டு நேரத்தை குறைக்க கூடாது

பெங்களூரு: 'பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, பாடங்களுடன், விளையாட்டும் அவசியம். எனவே எந்த காரணத்தை கொண்டும், அவர்களுக்கு விளையாட்டு நேரத்தை குறைக்கக் கூடாது' என, கல்வித்துறையிடம் குழந்தைகள் உரிமைகள் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கல்வித்துறை கமிஷனர் திரிலோக் சந்திராவுக்கு குழந்தைகள் உரிமை ஆணைய உறுப்பினர் திப்பேசாமி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: பள்ளிகளில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கில், 10ம் வகுப்பு மாணவர்களின் விளையாட்டு நேரத்தை குறைக்க, கல்வித்துறை முற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இத்தகைய செயல், மாணவர்களின் கல்வி மற்றும் திறனில் பின்னடைவை ஏற்படுத்தும். குழந்தைகள் உரிமைகள் ஆணைய உறுப்பினர்கள், மாநிலத்தின் பல்வேறு பள்ளிகளுக்கு சென்று, ஆய்வு செய்தனர். மாணவர்களுடன் கலந்துரையாடினர். அப்போது அவர்கள் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, பள்ளிகளில் விளையாட்டு நேரத்தை குறைத்திருப்பதாக கூறினர். விளையாட்டு நேரத்தில் பாட வகுப்புகள் நடக்கின்றன; இது சரியல்ல. விளையாட்டு, கலை, சங்கீதம் உள்ளிட்ட பாடங்கள் சாராத விஷயங்கள், மாணவர்களின் உடல், மனம் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே எந்த காரணத்தை முன்னிட்டும், பள்ளிகளில் விளையாட்டு நேரத்தை குறைக்கக் கூடாது. இது அவர்களின் கல்வித்திறனிலும், பாதிப்பை ஏற்படுத்தும். விளையாடும் நேரத்தை குறைப்பது, அவர்களின் உரிமைகளை மீறுவதாகும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை