உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கணவரின் முதல் மனைவி மகளை கொலை செய்த சித்தி கைது

கணவரின் முதல் மனைவி மகளை கொலை செய்த சித்தி கைது

பீதர்: கணவரின் முதல் மனைவியின் மகளை, மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த சித்தி கைது செய்யப்பட்டார். பீதர் நகரின் ஆதர்ஷா காலனியில் வசிப்பவர் சித்தாந்த், 34. இவருக்கு ஷான்வி, 6 என்ற மகள் இருந்தார். 2019ல் குழந்தை பிறந்த போது, உடல்நிலை பாதிப்பால் மனைவி இறந்துவிட்டார். சில ஆண்டுக்கு பின், ராதா, 20, என்பவரை சித்தாந்த் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ராதாவுக்கு இரட்டை குழந்தை பிறந்தது. தன் சொந்த குழந்தைகளுக்கே, சொத்து முழுதும் கிடைக்க வேண்டும் என, ராதா பேராசைப்பட்டார். ஆகஸ்ட் 27ம் தேதி, வீட்டின் மூன்றாவது மாடிக்கு ஷான்வியை அழைத்து சென்ற ராதா, அங்கிருந்து தள்ளி கொலை செய்தார். தவறி விழுந்து இறந்ததாக, கணவரிடமும், உறவினர்களிடமும் நாடகமாடினார். இந்நிலையில், அப்பகுதியில் வசிக்கும் சிலர், இரண்டு நாட்களுக்கு முன், எதேச்சையாக தங்கள் வீட்டு முன் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை பார்த்த போது, ஆகஸ்ட் 27ல், ஷான்வியை ராதா கொலை செய்ததை பார்த்து அதிர்ந்தனர். அவர்கள் உடனடியாக ஷான்வியின் பாட்டியிடம் கூறினர். அவரும் காந்தி பஜார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரும் நேற்று ராதாவிடம் விசாரித்த போது, கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !