உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  வாசிப்பு தன்மையை துாண்டிய தமிழ் புத்தக திருவிழா நிறைவு

 வாசிப்பு தன்மையை துாண்டிய தமிழ் புத்தக திருவிழா நிறைவு

-- நமது நிருபர்- -: கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் பெங்களூரில் 10 நாட்கள் நடந்த தமிழ் புத்தக திருவிழா கடந்த 5 ம் தேதி, இஸ்ரோ தலைவர் நாராயணன் துவக்கி வைத்தார். அன்று முதல் நேற்று வரை தினமும் ஏராளமான தமிழர்கள், புத்தக திருவிழாவுக்கு வந்து புத்தகத்தை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் வந்து குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் என பலரும் புத்தகங்களை தேடி, தேடி வாங்கியதை பார்த்த போது, மக்களுக்கு இன்னும் வாசிப்பு தன்மை குறையவில்லை என்பதை எடுத்து காட்டியது. சிலம்பாட்டம் பெங்களூரு மட்டுமின்றி தங்கவயல், மைசூரு, மங்களுரு, குடகு, ஷிவமொக்கா உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, தமிழர்கள் வந்து புத்தகங்களை அள்ளி சென்றனர். புத்தக திருவிழா போர் அடித்து விட கூடாது என்பதற்காக, கலைநிகழ்ச்சிகள், சிலம்பாட்டம், நாட்டுப்புற நடனம், பரதநாட்டியம், மேஜிக் ஷோக்களும் அரங்கேறின. விஞ்ஞானிகள் மயில்சாமி அண்ணாதுரை, டில்லிபாபு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ராம்பிரசாத் மனோகர், அவரது மனைவியும், தார்வாட் கலெக்டருமான திவ்யா பிரபு உள்ளிட்ட பிரபலங்கள் பேச்சுகள், மக்களை கவர்ந்தன. கண்காட்சியில் அரங்குகள் அமைத்திருந்த பல்வேறு பதிப்பகத்தினர், இம்முறை நல்ல வியாபாரம் நடந்தது என்று கூறினர். தமிழர்கள் மரபு விளையாட்டு அரங்கு, மாணவர்களின் கண்கவர் கண்காட்சி, கலைநிகழ்ச்சிகள், மத்திய அரசின் பழங்குடியினர் தயாரித்த பொருட்கள், சிறுவயது முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட்ட தேன் மிட்டாய், கடலை மிட்டாய், பஞ்சு மிட்டாய் என ஐந்து முதல் 90 வயதினர் வரை, அனைவரையும் நான்காம் தமிழ் புத்தக திருவிழா பெரிதும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. நீங்கா இடம் பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் 3,000 மாணவர்களுக்கு, தலா 100 ரூபாய் வீதம் வழங்கிய புத்தக கூப்பன் வாயிலாக அனைவரும் புத்தகங்கள் வாங்கி படிக்க துாண்டியது. 10 நாட்களும் தினமும் வெவ்வேறு கலைநிகழ்ச்சி, போட்டிகளுடன் நடந்தது. இறுதியாக பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, விருது வழங்கியதன் மூலம் நிறைவு பெற்றது. புத்தக திருவிழா துவங்க ஊக்கமாக இருந்த மறைந்த முத்து செல்வன், கி.சு.இளங்கோவன், பேராசிரியர் கு.வணங்காமுடி புகைப்படங்களுக்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. மொத்தத்தில் 10 நாட்கள் தமிழர்கள் அறிவு பசியை போக்கிய புத்தக திருவிழா, தமிழர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை