உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கே.எஸ்.சி.ஏ.,க்கு 19 நிபந்தனை விதித்த அரசு

கே.எஸ்.சி.ஏ.,க்கு 19 நிபந்தனை விதித்த அரசு

பெங்களூரு: ஆர்.சி.பி., அணி வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சியை, பெங்களூரு விதான் சவுதாவில் நடத்த கே.எஸ்.சி.ஏ.,க்கு, அரசு 19 நிபந்தனைகளை விதித்து இருந்தது தெரிய வந்துள்ளது.சின்னசாமி மைதானம் முன், கடந்த 4ம் தேதி ஏற்பட்ட, கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் இறந்ததற்கு, கே.எஸ்.சி.ஏ., எனும் கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் தான் காரணம் என, முதல்வர் சித்தராமையா கூறினார். ஆனால் தங்கள் மீது எந்த தவறும் இல்லை என, கிரிக்கெட் அசோசியேஷன் கூறியது.இதற்கிடையில் விதான் சவுதாவில் நிகழ்ச்சி நடத்துவதற்கு முன்பு, கிரிக்கெட் அசோசியேஷனுக்கு, கர்நாடக அரசு 19 நிபந்தனைகள் விதித்ததும் தற்போது தெரிய வந்துள்ளது.

பிளாஸ்டிக் பாட்டில்

1. விதான் சவுதாவில் நடக்கும் வெற்றி கொண்டாட்டத்தின்போது படிக்கட்டுகள், சிலைகள், சாலைகள், பூங்காக்களுக்கு எந்த சேதமும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏதாவது சேதம் ஏற்பட்டால் அதற்கான செலவை செய்ய தயாராக இருக்க வேண்டும்.2. போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் இருக்கக் கூடாது. போக்குவரத்து போலீசாருடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.3. அலுவலகத்திற்கு செல்வோருக்கு எந்த தொந்தரவும் ஏற்பட கூடாது. விதான் சவுதாவில் உள்ள அலுவலக பணிக்கும் தொந்தரவு இருக்கக் கூடாது.4. நிகழ்ச்சி நடக்கும் இடம் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.5. பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்த தடை செய்யப்பட்டு உள்ளது.

நீங்களே பொறுப்பு

6. நிகழ்ச்சியில் கலந்து கொள்வோருக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டால் வெளியில் இருந்து கொண்டு வர வேண்டும். இங்கு எரிவாயு சிலிண்டா் பயன்படுத்த கூடாது. விதான் சவுதாவின் கிழக்கு வாயில் பகுதியில் உணவு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு முன்பணமாக 10,000 ரூபாய் செலுத்த வேண்டும். எந்த பிரச்னையும் ஏற்படாவிட்டால் பணம் திரும்பப் தரப்படும்.7. துப்புரவு கட்டணமாக 10,000 ரூபாய் செலுத்த வேண்டும்.8. ஏதோ காரணத்திற்காக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டால் துப்புரவு கட்டணமாக செலுத்தப்பட்ட பணம் திரும்ப தரப்பட மாட்டாது.9. படிக்கட்டில் மேடை அமைக்க கட்டடம் பாதுகாப்பு பிரிவு, பொதுப்பணி துறை ஒப்புதல் பெறுவது அவசியம்.10. நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும் போது ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் நீங்களே பொறுப்பு.

ட்ரோனுக்கு தடை

11. மின்சார உபகரணம் பயன்படுத்தப்பட்டால் மின்சாரம், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒப்புதல் பெறுவது கட்டாயம்.12. அழைப்பு கடிதம் தயாரிக்கும்போது மாநில அரசு ஒப்புதல் பெறுவது அவசியம்.13. விதான் சவுதாவை சுற்றியுள்ள பகுதிகளில், ட்ரோன் பயன்படுத்த அனுமதி இல்லை.14. தீயணைப்பு துறை மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். தீயணைப்பு வாகனம், பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.15. மருத்துவர்கள், நர்சுகளை பணி அமர்த்த வேண்டும்.

அனுமதி பெறணும்

16. கூடாரம், பிற ஏற்பாடு செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்.17. நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்ட மேடைகள், அதில் இருக்கும் பொருட்களை நிகழ்ச்சி முடிந்த 3 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும்.18. பெங்களூரு போலீஸ் கமிஷனர், மாநகராட்சி அதிகாரிகளிடம் இருந்து அனுமதி பெற வேண்டும்.19. அழைப்பிதழுடன் வரும் முக்கிய பிரமுகர்களை அடையாளம் கண்டு அழைத்து வருவது உங்கள் பொறுப்பு. இதுதொடர்பாக விதான் சவுதா பாதுகாப்பு டி.சி.பி.,யுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும்.இவ்வாறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

3வது வழக்குப்பதிவு

கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தது தொடர்பாக, கப்பன் பார்க் முன்னாள் இன்ஸ்பெக்டர் கிரிஷ் அளித்த புகாரில் ஆர்.சி.பி., நிர்வாகம் - டி.என்.ஏ., தனியார் நிறுவனம் - கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் மீது வழக்குப்பதிவானது.நேற்று முன்தினம் ஆர்.ஆர்.நகரில் வசிக்கும் ரோலன் கோம்ஸ், 25, என்பவர் அளித்த புகாரில், 'சின்னசாமி மைதானத்திற்குள் நடக்கும் நிகழ்ச்சியை பார்க்க, நுழைவு வாயில் 7ல் இலவச பாஸ் வழங்கப்படுவதாக, ஆர்.சி.பி., அணி நிர்வாகம் சமூக வலைத்தளத்தில் கூறியது. இதை நம்பி அங்கு சென்றபோது ஏற்பட்ட, கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தேன். ஆர்.சி.பி., நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கப்பன் பார்க் போலீசில் புகார் செய்தார்.இதே காரணத்தை முன்வைத்து விஜினாபுராவில் வசிக்கும் வேணு, 21, என்பவரும் நேற்று புகார் செய்தார். இந்த இரண்டு புகாரின்பேரில், ஆர்.சி.பி., நிர்வாகம் - டி.என்.ஏ., தனியார் நிறுவனம் - கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சிகிச்சையில் 22 பேர்

கூட்ட நெரிசலில் சிக்கி 50 பேர் வரை காயம் அடைந்திருக்கலாம் என்று, முதல்வர் சித்தராமையா கூறி இருந்தார். காயம் அடைந்தவர்கள் 65 பேர் என்றும், அதில் 43 பேர் டிஸ்சார்ஜ் ஆனதும், மீதும் 22 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

மாநகராட்சி நோட்டீஸ்

சின்னசாமி மைதானத்திற்குள் உள்ளேயோ, வெளியேயோ ஏதாவது விளம்பரம் காட்சிப்படுத்தப்பட்டால் அதற்காக மாநகராட்சிக்கு விளம்பர வரியை, கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் செலுத்த வேண்டும். ஆனால் பல ஆண்டுகளாக விளம்பர வரி கட்டாமல் வரி ஏய்ப்பு செய்து வந்துள்ளனர். நோட்டீஸ் அனுப்பியும் பதில் கொடுக்கவில்லை. தற்போது உள்ள சூழ்நிலையை பயன்படுத்தி, விளம்பர வரி வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. வரி செலுத்தும்படி நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ