தந்தையை கொன்று நாடகமாடிய மகன்
பாகல்குன்டே: வேலைக்கு செல்லுமாறு கூறிய தந்தையை கொலை செய்து, உடல்நலக்குறைவால் இறந்ததாக நாடகமாடிய மகனை போலீசார் தேடுகின்றனர். பெங்களூரு, தாசரஹள்ளியில் வசித்தவர் மஞ்சுநாத், 55. இவர், கடந்த 3ம் தேதி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். உடல்நலக்குறைவால் மஞ்சுநாத் இறந்ததாக அவரது மகன் மனோஜ், 34, கதறி அழுதார். மஞ்சுநாத் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டபோது, கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது தெரிய வந்தது. மனோஜ் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது; அவரை கண்காணித்தனர். மஞ்சுநாத் இறந்த அன்று, வீட்டிற்கு மனோஜும், அவரது நண்பர் பிரவீன், 34, என்பவரும் வந்ததை, போலீசார் உறுதி செய்தனர். இரண்டு நாட்களுக்கு முன்பு பிரவீனை பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பேசினார். கிடுக்கிப்பிடி விசாரணையில், மஞ்சுநாத் கழுத்தை துண்டால் நெரித்து, மனோஜ் கொலை செய்ததாக தெரிவித்தார். கொலை நடந்தபோது, மஞ்சுநாத்துக்கு உதவியாக இருந்ததையும் கூறினார். இதனால் பிரவீன் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள மனோஜை, பாகல்குண்டே போலீசார் தேடுகின்றனர். மனோஜ் வேலைக்கு செல்லாமல், தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் தந்தை, மகன் இடையில் அடிக்கடி, தகராறு ஏற்பட்டுள்ளது. வேலைக்கு செல்லும்படி மனோஜிடம், மஞ்சுநாத் கூறி உள்ளார். ஆத்திரத்தில் தந்தையை, மகன் கொன்றது விசாரணையில் தெரிய வந்தது.