குடிபோதையில் தகராறு நண்பரை கொன்ற மூவர் கைது
கோலார்: வேம்கல் தொழிற்பேட்டையின் குருகல்கேட்டில், மது போதையில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். வேம்கல் தொழிற்பேட்டையில் குருகல்கேட்டில் ஒடிஷா, பீஹார், தமிழகம், ஆந்திரா மாநிலத்தவர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் போதை பொருட்கள் அதிகளவு பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இதனால், குற்றச்சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக அப்பகுதியினர் போலீசாரிடம் புகார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கடந்த, 25ம் தேதி இரவு, பல்லாரி ராஜாரெட்டி, 38, அனிருத், 40. பெங்களூரு மனோஜ், 40, ஆகியோருடன் சேர்ந்து பீஹாரின் சந்தீப் சிங், 38, என்பவர் மது அருந்தினர். இவர்கள் நண்பர்கள். போதையில் இருந்த சந்தீப் சிங்குக்கும், ராஜா ரெட்டிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுமுற்றி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். மனோஜ், ராஜாரெட்டியுடன் சேர்ந்து, சந்தீப்பை தாக்கியதுடன், கத்தியால் குத்தியதாகவும் தெரிகிறது. காயம் அடைந்த சந்தீப்பை, அவர்களே இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அந்த நேரத்திலும் சந்தீப், 'நான் குணம் அடைந்த பிறகு உங்களை சும்மா விட மாட்டேன்' என்று கூறியுள்ளார். இதனால், மேலும் கோபம் அடைந்த ராஜா ரெட்டி, வழியிலேயே சந்தீப்பை கீழே இறக்கி விட்டு, அவரின் கழுத்தை அறுத்ததுடன், அவரது தலை மீது கல்லையும் போட்டு உள்ளார். இதில் சந்தீப்சிங் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்த போலீசார் விசாரணை நடத்தி, ராஜாரெட்டி, அனிருத், மனோஜ் ஆகியோரை கைது செய்தனர். பீஹாரில் உள்ள உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.