டிப்பர் லாரி - அரசு பஸ் மோதல் 2 ஓட்டுநர்கள் உட்பட 3 பேர் பலி
விஜயபுரா: டிப்பர் லாரியின் சக்கரம் வெடித்ததில், கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் மீது மோதியதில், இரு ஓட்டுநர்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். விஜயபுரா மாவட்டம் சடசான் தாலுகாவில் இருந்து விஜயபுரா நகருக்கு நேற்று காலையில், 20க்கும் மேற்பட்ட பயணியருடன், கே.எஸ்.ஆர்.டி.சி., அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. விஜயபுராவில் இருந்து சடசானுக்கு டிப்பர் லாரி சென்று கொண்டிருந்தது. சடலானின் லோனி கிராஸ் அருகே சென்று கொண்டிருந்தபோது, முன்பக்க சக்கரம் திடீரென வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, தாறுமாறாக ஓடியது. எதிரே வந்த அரசு பஸ் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில், பஸ் ஓட்டுநர் ஹனுமந்த் சலவாதி, லாரி ஓட்டுநர் அசோக் உடகி, அவரது மனைவி ராதாபாய் ஆகியோர் சம்பவ இடத்தில் பலியாகினர். படுகாயம் அடைந்த, 23 பயணியர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் ஆறு பேருக்கு கடுமையான காயம் ஏற்பட்டு உள்ளதால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சடசான் போலீசார் விசாரிக்கின்றனர்.