சபாரியில் புலி நடமாட்டம் சுற்றுலா பயணியர் குஷி
மைசூரு: மை சூரின் தம்மனகட்டே, வனப்பகுதியில் சபாரியின்போது, புலி தென்பட்டதால் சுற்றுலா பயணியர் குஷியடைந்தனர். மைசூரு மாவட்டத்தின் தம்மனகட்டா வனப்பகுதியும் பிரசித்தி பெற்றதாகும். நாகரஹொளே, பண்டிப்பூர் உட்பட, மற்ற வனப்பகுதிகளை போன்று, தம்மனகட்டேவிலும் சுற்றுலா பயணியர் சபாரி செய்ய அனுமதி உள்ளது. நேற்று முன்தினம் மாலை ஜீப்பில் சுற்றுலா பயணியர் சபாரி சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென புலி நடமாடியது. இந்த வனப்பகுதியில் சிறுத்தை, யானைகள், காட்டெருமை உட்பட, பல்வேறு வன விலங்குகள் தென்பட்டாலும், புலியை பார்ப்பது அரிதானது. சபாரி செல்லும் சுற்றுலா பயணியர், புலி தென்படாதா என, ஏக்கத்துடன் தேடுவர். தற்போது புலி தென்பட்டதால், சுற்றுலா பயணியர் குஷி அடைந்தனர். ஆச்சரியத்துடன் கூச்சலிட்டனர். நிதானமாக நடந்து வந்த புலியை, தங்கள் மொபைல் போனி ல் படம், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த படம், வீடியோ வேகமாக பரவியுள்ளது.