உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / புதிதாக 2,000 பஸ்கள் வாங்க போக்குவரத்து துறை திட்டம்

புதிதாக 2,000 பஸ்கள் வாங்க போக்குவரத்து துறை திட்டம்

பெங்களூரு,: 'சக்தி' திட்டத்தின் கீழ், அரசு பஸ்களில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கூடுதல் பஸ்கள் இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக 2,000 புதிய பஸ்கள் வாங்க தயாராகிறது.முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு செயல்படுத்திய, 'சக்தி' திட்டத்தின் கீழ், அரசு பஸ்களில் தினமும் லட்சக்கணக்கான பெண்கள் இலவசமாக பயணிக்கின்றனர். பஸ்களில் பெண்களே அதிகம் இருப்பதால், ஆண்களுக்கு இருக்கை கிடைப்பது இல்லை. இருக்கைக்காக பெண்களே அடித்து கொள்ளும் சம்பவங்கள், ஆங்காங்கே நடக்கின்றன. வரும் நாட்களில் பயணியர் நெருக்கடி, மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதை மனதில் கொண்டு போக்குவரத்து துறை புதிய பஸ்கள் வாங்க, முடிவு செய்துள்ளது.இது குறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:சக்தி திட்டம் துவங்கிய பின், அரசு பஸ்களில் பெண் பயணியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பஸ்களில் கால் வைக்கவே இடம் இருப்பதில்லை. இதனால், புதிதாக 2,000 பஸ்கள் வாங்க, போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. இதற்கு நிதித்துறையும் ஒப்புதல் அளித்துள்ளது.கல்யாண கர்நாடகா போக்குவரத்து கழகத்துக்கு, 700 பஸ்கள், வட மேற்கு போக்குவரத்து கழகத்துக்கு 500, கே.எஸ்.ஆர்.டி.சி.,க்கு 800 பஸ்கள் வாங்கப்படும். அதேபோன்று பி.எம்.டி.சி.,க்கு 320 குளிர்சாதன வசதியுள்ள மின்சார பஸ் வாங்கப்படும்.இது தவிர 7,000 புதிய மின்சார பஸ்களை வழங்கும்படி, மத்திய அரசிடம் பி.எம்.டி.சி., வேண்டுகோள் விடுத்துள்ளது. 5,000 பஸ்களுக்கு அனுமதி கிடைக்கலாம் என, எதிர்பார்க்கிறோம். பெலகாவி, மைசூரு, கலபுரகி, துமகூரு, ஹூப்பள்ளி, தாவணகெரே, ராய்ச்சூர் நகரங்களுக்கும் மின்சார பஸ்கள் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ