உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சுரங்கப்பாதையில் மண் சரிந்து இரண்டு தொழிலாளர்கள் பலி

 சுரங்கப்பாதையில் மண் சரிந்து இரண்டு தொழிலாளர்கள் பலி

பெங்களூரு: பெங்களூரில் சுரங்கப்பாதை பணியின் போது மண் சரிந்ததில், இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பெங்களூரு பி.டி.ஐ., சதுக்கம் அருகில், டாக்டர் ராஜ்குமார் நினைவு இடம் அருகில் உள்ள சாலையில், பி.டி.ஏ., எனும் பெங்களூரு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. நேற்று காலை 11:30 மணிக்கு குழியில் நிரம்பியிருந்த தண்ணீர் வெளியேற்றும் பணியில் ஜார்க்கண்ட், மேற்கு வங்கத்தை சேர்ந்த சதானந்த், சுனில், இம்தியாஸ், பரிமல், ஒடிசாவை சேர்ந்த சோனாராம் ஆகிய ஐந்து தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென மண் சரிந்தது. இதை பார்த்த மூன்று தொழிலாளர்கள் தப்பினர். இருவர் மண்ணுக்குள் சிக்கிக் கொண்டனர். இதை பார்த்த மற்ற தொழிலாளர்கள், அப்பகுதியில் இருந்த மக்கள், இருவரையும் மீட்க முயற்சித்தனர். பரிமல், 31, மண்ணில் புதைந்து உயிரிழந்தார். சோனாராமை நந்தினி லே - அவுட் போலீசார், மீட்பு குழுவினர் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பி.டி.ஏ., கமிஷனர் மணிவண்ணன் கூறியதாவது: விபத்து குறித்து தகவல் சேகரிக்கப்படுகிறது. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதுடன், உயிரிழந்த தொழிலாளர்களி ன் குடும்பத்தினருக்கு, அடுத்து, 24 மணி நேரத்துக்குள் உரிய இழப்பீடு வழங்க, ஒப்பந்ததாரருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி, 45 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிககும்படி, பி.டி.ஏ.,வின் உள் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பா.ஜ., - எம்.எல்.ஏ., கோபாலய்யா கூறியதாவது: இந்த விபத்துக்கு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களின் அலட்சியமும், கவனக்குறைவுமே காரணம். இத்தகைய பிரமாண்டமான சுரங்கப்பாதை பணிகளை, மழைகாலத்தில் செய்யலாமா, வேண்டாமா என்று அதிகாரிகளும், நிபுணர்களும் யோசித்திருக்க வேண்டும். மழைநீர் தேங்கி நின்றபோது, அதை அகற்றும் பணியில் இந்த துயரம் நிகழ்ந்துள்ளது. 18 - 19 அடி உயரத்துக்கு ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக, ஐந்து பேர் சிக்கினர். இத்தகைய பணிகள் மழைகாலத்துக்கு முன்பே முடித்திருக்க வேண்டும். நான் எம்.எல்.ஏ., ஆவதற்கு முன் துவங்கப்பட்ட இப்பணி, பாதியில் நின்றது. இதை முடிக்க கோரி, நான் போராட்டம் நடத்தியதால், 2023ன் துவக்கத்தில் மீண்டும் பணிகள் துவங்க அனுமதி பெற்றேன். ஆனால், அதிகாரிகள் முறையான திட்டமிடலும், கண்காணிப்பும் இன்றி செயல்பட்டதே, இந்த பேரழிவுக்கு காரணம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !