பேக்கரியில் ரசாயனம் பயன்பாடு ரூ.10,000 அபராதம் விதிப்பு
தங்கவயல்: தங்கவயல் நகரில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க நேற்று அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ராபர்ட்சன்பேட்டை அம்பேத்கர் சாலையில் உள்ள மயூரா பேக்கரியில், நகராட்சி சுகாதாரத் துறை அதிகாரி மங்கள கவுரி தலைமையில் நகராட்சி ஊழியர்கள் நேற்று சோதனை நடத்தினர். இந்த பேக்கரியில் பாலித்தின் காகிதங்கள் பயன்படுத்தி வருவதும், இங்கு தயாரிக்கப்படும் கேக், பிஸ்கட்களில் தடை செய்யப்பட்ட ரசாயன கலவைகள் கலப்பதும் தெரியவந்தது. இவை அனைத்தையும் பறிமுதல் செய்தனர். அந்த பேக்கரிக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தனர். கோலார் கலெக்டர் வருகிறார் என்றதும், நகராட்சி அலுவலகம் உள்ள சாலையின் நடைபாதை கடைகளை பலரும் அகற்றினர். நான்கைந்து நாட்களுக்கு பின், முன்பு இருந்த கடைகளை விட மேலும் பல கடைகள் உருவாகி உள்ளன. இதனால் ராபர்ட்சன்பேட்டை, ஆண்டர்சன்பேட்டை மார்க்கெட்டுகளில் வியாபாரமே ஸ்தம்பித்து விட்டதாக வியாபாரிகள் வருந்து கின்றனர். நகராட்சி அருகே கடைகள் முளைப்பதற்கு தாறுமாறான கமிஷன் தான் காரணம் எனவும் கூறுகின்றனர். ராபர்ட்சன் பேட்டையில் பிரபல இனிப்பு கடைகளில் ரசாயனம் பயன்படுத்தப்படுகிறதா என நகராட்சி அதிகாரிகள் ‘ரெய்டு’ நடத்தினர். ஆனால், அந்த அதிரடி சோதனை ஓரிரு நாட்கள் மட்டுமே நடந்தது. வழக்கம்போல வண்ண மயமான இனிப்புகள், இன்றும் விற்பனை செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.