தர்ஷனுக்கு விசா நிராகரிப்பு? ஐரோப்பிய நாடுகள் அதிரடி!
பெங்களூரு : நீதிமன்றம் அனுமதி அளித்தும், படப்பிடிப்பில் பங்கேற்க, நடிகர் தர்ஷனால் வெளிநாடு செல்ல முடியவில்லை. அவருக்கு ஐரோப்பிய நாடுகள் விசா மறுத்ததாக தகவல் வெளியாகிஉள்ளது.சித்ரதுர்காவின் ரேணுகாசாமி கொலை வழக்கில், நடிகர் தர்ஷன் சிக்கியுள்ளார். இந்த வழக்கில் கைதான அவர், மாதக்கணக்கில் சிறையில் இருந்தார். உடல்நிலை பாதிப்பை காரணம் காட்டி, நீதிமன்றத்தில் ஜாமின் பெற்றுக் கொண்டார்.சில நாட்கள் ஓய்வுக்கு பின், படப்பிடிப்பில் பங்கேற்க துவங்கினார். இவரது நடிப்பில், 'டெவில்' படம் பாதியில் நின்றிருந்தது. இதை விரைந்து முடிக்கும் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.பாடல் காட்சிகளை படமாக்க சுவிட்சர்லாந்து உட்பட, சில ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். தர்ஷன் பெங்களூரை தாண்டக்கூடாது என, நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது. எனவே, தர்ஷன் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, ராஜஸ்தானில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்றார்.படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்ல வேண்டியுள்ளதால், ஜூன் 1 முதல் 25ம் தேதி வரை, அனுமதி அளிக்கும்படி, சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். நீதிமன்றமும் அவருக்கு அனுமதி அளித்தது. நீதிமன்றம் அனுமதி அளித்ததால், ஜூன் 1ம் தேதியே தர்ஷனும், படக்குழுவினரும் வெளிநாடு சென்றிருக்க வேண்டும். ஆனால் செல்லவில்லை.தங்களின் நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணியருக்கு, விசா அளிப்பதற்கு முன்பு, அவர்களின் பின்னணியை ஐரோப்பிய நாடுகள் ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி கொலை குற்றச்சாட்டு இருப்பதை அறிந்து, நடிகர் தர்ஷனுக்கு விசா வழங்க, அந்நாடுகள் மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.நீதிமன்றம் அளித்த 25 நாட்கள் அனுமதியில், ஏற்கனவே 11 நாட்கள் கடந்துள்ளன. படக்குழுவினர் விசாவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.