உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  எத்தினஹொளே திட்டம் மூலம் துமகூருக்கு தண்ணீர்: பரமேஸ்வர்

 எத்தினஹொளே திட்டம் மூலம் துமகூருக்கு தண்ணீர்: பரமேஸ்வர்

துமகூரு: ''எத்தினஹொளே திட்டம் மூலம் துமகூருக்கு தண்ணீர் கொண்டு வர முயற்சி செய்வேன்,'' என, துணை முதல்வர் பரமேஸ்வர் கூறியுள்ளார். துணை முதல்வர் பரமேஸ்வர் பதவியேற்ற பின், முதன்முறையாக சொந்த ஊரான துமகூருக்கு நேற்று வந்தார். சித்தகங்கா மடத்திற்கு சென்ற அவர், மடாதிபதி சித்தலிங்க மகா சுவாமியிடம் ஆசி பெற்றார். மடத்தில் உள்ள சிவகுமார சுவாமி, சிவன் சிலைகளை வணங்கினார். பின், பரமேஸ்வர் அளித்த பேட்டி: என் வாழ்க்கையில் நல்லது நடக்கும் போது எல்லாம், சித்தகங்கா மடத்திற்கு வருவது வழக்கம். துணை முதல்வராக பதவியேற்ற பின், இங்கு வருவது முதல் முறை. வருவாய் துறை என்னிடம் உள்ளது. அந்த துறையில் பணியாற்றும் போது கடவுளின் ஆசி முக்கியம் என்பதை உணர்ந்து உள்ளேன். சிவகுமார் முதல்வராகி நான்கு நாட்கள் ஆகின்றன. வாக்குறுதிகளை நிறைவேற்றும் செயல் திட்டங்களை அவர் வகுத்துள்ளார். மாநில மக்களுக்கு நல்லாட்சி வழங்க உள்ளோம். மாநிலத்தின் பல வளர்ச்சி பணிகளை அதிவேகமாக மேற்கொள்ள, முதல்வருடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம். துமகூரு மாவட்டத்தில் பல பிரச்னைகள் உள்ளன. அதை விரைவாக தீர்க்க முயற்சிப்பேன். எத்தினஹொளே குடிநீர் திட்டம் மூலம் இம்மாதம் துமகூருக்கு தண்ணீர் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் வனப்பகுதி நில பிரச்னை காரணமாக, தண்ணீர் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பி ரச்னையை தீர்த்து கூடிய விரைவில் தண்ணீர் கொண்டு வர முயற்சி செய்வேன். மாநிலத்தின், 97 லட்சம் விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில், வருவாய் துறை அமைச்சராக பணியாற்ற உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !