உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தர்மஸ்தலா வழக்கில் இது வரை நடந்தது என்ன? எஸ்.ஐ.டி., தலைவர் பிரணவ் மொஹந்தி  விசாரணை

தர்மஸ்தலா வழக்கில் இது வரை நடந்தது என்ன? எஸ்.ஐ.டி., தலைவர் பிரணவ் மொஹந்தி  விசாரணை

பெங்களூரு : தர்மஸ்தலா வழக்கில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணை குறித்து, ஐ.பி.எஸ்., ஜிதேந்திர குமார் தயமாவிடம் இருந்து, எஸ்.ஐ.டி., தலைவர் பிரணவ் மொஹந்தி தகவல் பெற்று உள்ளார். தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உடல்கள் புதைக்கப்பட்டதாக சின்னையா என்பவர் அளித்த புகாரில், எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. அவர் அடையாளம் காட்டிய 20 இடங்களில் பள்ளம் தோண்டியும் எலும்புகள் கிடைக்கவில்லை. இதனால் பள்ளம் தோண்டும் பணி நிறுத்தப்பட்டது. தர்மஸ்தலாவுக்கு எதிராக அவதுாறு பரப்பும்படி சின்னையாவை, பின்னால் இருந்து, ராஷ்ட்ரீய ஹிந்து ஜாக்ரன வேதிகே அமைப்பு தலைவர் மகேஷ் திம்மரோடி, சமூக ஆர்வலர்கள் கிரிஷ் மட்டன்னவர், ஜெயந்த் ஆகியோர் இயக்கியது தெரிய வந்தது. எலும்பு கூடு மகேஷ் திம்மரோடியை தவிர, கிரிஷ் மட்டன்னவர், ஜெயந்த், யு - டியூபர்கள் அபிஷேக், சமீர், முனாப் ஆகியோரிடம் விசாரணை நடத்தி, பெல்தங்கடி போலீசார், எஸ்.ஐ.டி., அதிகாரிகள் தகவல் பெற்றனர். கடந்த 2012 ல் தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட, கல்லுாரி மாணவி சவுஜன்யாவின் மாமா விட்டல் கவுடாவும் விசாரணை வளையத்தினுள் கொண்டு வரப்பட்டார். அவரை இரண்டு முறை தர்மஸ்தலாவின் பங்களாகுட்டா வனப்பகுதிக்கு அழைத்து சென்று, எஸ்.ஐ.டி., விசாரித்தது. தன்னை விசாரணைக்கு அழைத்து சென்ற போது, வனப்பகுதியில் மனித எலும்பு கூடுகளை பார்த்ததாக, விட்டல் கவுடா வீடியோ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணைக்கு ஆஜரான போது கிரிஷ் மட்டன்னவரும், கடந்த 1987 முதல் தற்போது வரை தர்மஸ்தலாவில் நடந்த மரணங்கள், இயற்கைக்கு மாறான மரணங்கள், கிராம பஞ்சாயத்தால் அடக்கம் செய்யப்பட்ட உடல்கள் தொடர்பான ஆவணங்களை கொடுத்தார். தர்மஸ்தலா கிராம பஞ்சாயத்து நிர்வகித்து வரும் ஆவணங்களில் குளறுபடி இருப்பதாகவும் கூறினார். இதனால் கிராம பஞ்சாயத்திடம் இருந்து, எஸ்.ஐ.டி., அதிகாரிகள் ஆவணங்கள் பெற்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் எஸ்.ஐ.டி., குழு தலைவர் பிரணவ் மொஹந்தி நேற்று மங்களூரு வந்தார். விமான நிலையத்தில் இருந்து காரில் பெல்தங்கடி எஸ்.ஐ.டி., அலுவலகம் சென்றார். வழக்கின் விசாரணை அதிகாரி ஜிதேந்திர குமார் தயமாவுடன், பிரணவ் மொஹந்தி ஆலோசனை நடத்தினார். வழிகாட்டுதல் வழக்கில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணை என்ன; சின்னையாவுக்கு பின், தர்மஸ்தலாவில் நடந்த மரணங்கள் குறித்து புகார் அளித்தவர்கள் கொடுத்த தகவலின்படி என்ன விசாரணை நடத்தப்பட்டது; பங்களாகுட்டா வனப்பகுதியில் மனித எலும்பு கூடுகளை பார்த்ததாக, விட்டல் கவுடா கூறுவது உண்மையா; அடுத்தகட்ட விசாரணைக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பதை கேட்டறிந்தார். பின், கிரிஷ் மட்டன்னவர் கொடுத்த ஆவணம், தர்மஸ்தலா கிராம பஞ்சாயத்து கொடுத்த ஆவணங்களையும் சரிபார்த்தார். பின், மங்களூரு புறப்பட்டு சென்றார். இரவில் அங்கு தங்கிய அவர், வழக்கில் எடுக்க வேண்டிய, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எஸ்.ஐ.டி., அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் வழங்க உள்ளார். இதற்கிடையில், பெல்தங்கடி போலீஸ் நிலையத்தில், உஜ்ரே பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் வெங்கப்பா கோட்டியான் நேற்று அளித்த புகாரில், 'கடந்த 2012ல் கல்லுாரி மாணவி சவுஜன்யா பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். அவரது மரணத்திற்கு நீதி கேட்டு போராடி வருகிறோம். 'ஆனால், மைசூரை சேர்ந்த சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா, சவுஜன்யா வழக்கில் தேவையின்றி உள்ளே வந்து உள்ளார். சவுஜன்யாவை அவரது மாமா விட்டல் கவுடா தான் கொலை செய்தார் என்று கூறி, வழக்கு விசாரணையை திசைதிருப்ப பார்க்கிறார். சிநேகமயி கிருஷ்ணா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டு இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை