உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சிவசேனா ஷிண்டே பிரிவில் எத்னால்? வாய்ப்பே இல்லை என திட்டவட்டம்

சிவசேனா ஷிண்டே பிரிவில் எத்னால்? வாய்ப்பே இல்லை என திட்டவட்டம்

கர்நாடகாவில் உள்ள முக்கிய அரசியல் கட்சி தலைவர்களில் ஒருவர், 'ஹிந்து பிராண்ட்' எத்னால். இவர், பா.ஜ.,வில் இருந்தபோது, அக்கட்சியின் தலைவர்களை, எதிர்க்கட்சிக்காரர் போன்று விமர்சித்ததால் கட்சியிலிருந்து சில மாதங்களுக்கு முன் நீக்கப்பட்டார். எந்த கட்சியிலும் சேராமல் பல ஊர்களுக்கு சென்று ஹிந்து பிரசாரத்தை செய்து கொண்டு, தனக்கென ஒரு கூட்டத்துடன் தனிக்காட்டு எம்.எல்.ஏ.,வாக திகழ்கிறார். ஹிந்துத்துவா கொள்கையில் சமரசம் இல்லாமல் செயல்படுவதால், இவர் எந்த ஊருக்கு சென்றாலும் பெரும் கூட்டம் கூடுகிறது. சர்ச்சைக்குரிய கருத்துகளை சர்வ சாதாரணமாக சொல்வது, இவருக்கு கைவந்த கலை. இப்படிப்பட்ட எத்னால் தனியாக கட்சி தொடங்கப் போவதாக தகவல்கள் வெளியாயின. இதை திட்டவட்டமாக மறுத்த அவர், 'தனி கட்சி துவங்கும் எண்ணமே இல்லை; ஹிந்துக்கள் ஓட்டுகளை பிரிக்கும் முயற்சியில் ஈடுபட மாட்டேன்' என தெளிவாக, அழுத்தம் திருத்தமாக தன் நிலைப்பாட்டை கூறினார். இதன் பின்னர், சிவசேனா ஷிண்டே பிரிவில் எத்னால் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதை உறுதி செய்யும் வகையில் சிவசேனா ஷிண்டே பிரிவு மாநில தலைவர் சித்தலிங்க சுவாமிஜி கூறுகையில், ''எத்னால், எங்கள் கட்சியில் இணைந்தால் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படும். அவரை, எங்கள் அணியில் சேர்த்து ஹிந்து ஓட்டுகள் பிரிவதை தடுப்போம். அவருடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறோம்,'' என வெளிப்படையாக கூறினார்.

இதற்கு பதிலளித்து, எத்னால் நேற்று அளித்த பேட்டி:

நான் எந்த பெரிய கட்சியிலும் சேரப்போவதில்லை. சித்தராமையா என்னிடம், புதிய கட்சியை தொடங்கும்படி கூறினார். 'நீங்கள் புது கட்சி துவங்கினால் தேர்தலின்போது காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்' என்றார். நான் புதிய கட்சியை தொடங்கி, ஹிந்துக்கள் ஓட்டுகளை பிரிக்க மாட்டேன். சிவசேனா ஷிண்டே பிரிவில் சேரப்போவது குறித்து எதுவும் பேசவில்லை; பேசப்போவதுமில்லை. காங்கிரஸ் ஆட்சியில் ஹிந்துக்களுக்கு எதிராக வன்முறை நடக்கிறது. இதை தடுக்க வேண்டும் என பலரும் என்னிடம் முறையிடுகின்றனர். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. ஹிந்துக்கள் கோவில்களுக்கு கொடுக்கும் பணத்தை வைத்து கோவில்கள், மடம், ஏழை குழந்தைகளுக்கு படிப்பு, பசு மடம் போன்றவை அமைக்க வேண்டும். ஆனால், அரசோ, அப்பணத்தை கொள்ளை அடித்து வருகிறது. 2028ல் கர்நாடகாவில் ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் ஆட்சி வரும் என்பது உறுதி. இவ்வாறு அவர் கூறினார். இதன் மூலம், சிவசேனா ஷிண்டே பிரிவில் எத்னால் சேரப்போவதாக வெளியான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை