உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பேயாக வந்து மனைவி பயமுறுத்துவாரோ? கோவிலில் தகடு அடித்த கணவர் சிக்கினார்

பேயாக வந்து மனைவி பயமுறுத்துவாரோ? கோவிலில் தகடு அடித்த கணவர் சிக்கினார்

சிக்கமகளூரு : மனைவியை கொன்று ஆழ்துளை கிணற்றில் சடலத்தை வீசி விட்டு, காணாமல் போனதாக நாடகமாடிய கணவர், மாமனார், மாமியார் கைது செய்யப்பட்டுள்ளனர். பேயாக வந்து தன்னை பயமுறுத்துவாரோ என்ற பீதியில், தகட்டில் எழுதி, கோவில் மரத்தில் கட்டியதால், போலீசில் சிக்கினர். சிக்கமகளூரின் கடூர் தாலுகா, அலகட்டா கிராமத்தை சேர்ந்தவர் விஜய், 30. இவரது மனைவி பாரதி, 28. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. கடந்த மாதம் 4ம் தேதி கடூர் போலீஸ் நிலையத்தில் விஜய் அளித்த புகாரில், 'ஷிவமொக்காவில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்ற, என் மனைவி பாரதியை காணவில்லை. அவரை கண்டுபிடித்து தர வேண்டும்' என குறிப்பிட்டு இருந்தார். அந்த புகாரின்படி, மாயமான பாரதியை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன், பாரதியின் சகோதரர் மாருதியை அழைத்துக் கொண்டு, சக்கராயப்பட்டணாவில் உள்ள சவுடேஸ்வரி கோவிலுக்கு விஜய் சென்றார். அந்த கோவிலில் உள்ள மரத்தில் கட்டப்பட்டு இருந்த தகட்டில், 'நான் என் மனைவி பாரதியை கொன்று விட்டேன். பேயாக வந்து என்னை பயமுறுத்த கூடாது. அவளால் எனக்கும், என் குடும்பத்தில் யாருக்கும் எந்த தீங்கும் ஏற்பட கூடாது' என்று எழுதப்பட்டு இருந்தது. இதை மாருதி பார்த்துவிட்டார். விஜயிடம் கேட்டபோது அவர் மழுப்பலாக பதில் அளித்தார். இதுகுறித்து கடூர் போலீசாரின் கவனத்திற்கு, மாருதி கொண்டு சென்றார். நேற்று முன்தினம் இரவு விஜய், அவரது தந்தை கோவிந்தப்பா, தாய் தாயம்மாவை பிடித்து விசாரித்தனர். பாரதி கொலை செய்யப்பட்டது தெரிந்தது. மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். பாரதியிடம், 2 லட்சம் ரூபாய் வரதட்சணை வாங்கி வரும்படி விஜய் கூறி உள்ளார். இதற்கு பாரதி மறுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில், கடந்த மாதம் 3ம் தேதி அவர் தலையின் மரக்கட்டையால் அடித்து, விஜய் கொலை செய்தார். பின், உடலை பைக்கில் எடுத்துச் சென்று, தங்கள் நிலத்தில் உள்ள, ஆழ்துளை கிணற்றில் போட்டுள்ளார். இதற்கு கோவிந்தப்பாவும், தாயம்மாவும் உதவியதாக தெரிய வந்தது. ஆழ்துளை கிணற்றில் இருந்து, பாரதி உடலை வெளியே எடுக்க, போலீசார் தயாராகி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி