திருமணம் நின்றதால் இளம்பெண் தற்கொலை
மாண்டியா: திருமணத்தை மணமகனின் குடும்பத்தினர் நிறுத்தியதால், மனம் நொந்து இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். மாண்டியா மாவட்டம், கே.ஆர்.பேட் தாலுகாவின் வளகெரே மெனசா கிராமத்தில் வசித்தவர் காவ்யா, 26. இவர் கிக்கேரி கிராமத்தில் உள்ள விவசாய தொடர்பு மையத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும், ஹாசனை சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் நிச்சயமானது. சில நாட்களுக்கு முன்பு, கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்தது. முகூர்த்த தேதி பார்த்து வந்த நிலையில், திருமணத்தில் விருப்பம் இல்லை என, கூறி இளைஞரின் குடும்பத்தினர் நிறுத்திவிட்டனர். திருமணம் நின்றதால், மனம் நொந்திருந்த காவ்யா, நேற்று முன் தினம் அலுவலகத்தில், தற்கொலை செய்யும் எண்ணத்தில் அதிகமான துாக்க மாத்திரைகளை தின்றார். மயங்கி விழுந்த அவரை, அலுவலக சக ஊழியர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல், நேற்று காலை அவர் உயிரிழந்தார். கிக்கேரி போலீசார் விசாரிக்கின்றனர்.