இளம்பெண் தற்கொலை கணவர் மீது வழக்கு
தலகட்டாபுரா : வரதட்சணை கொடுமையால் இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது. பெங்களூரு தலகட்டபுரா அவலஹள்ளியில் வசிப்பவர் சைலேஷ், 30; ஐ.டி., ஊழியர். இவரது மனைவி நவ்யா, 28. இவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஆடம்பரமாக திருமணம் நடந்தது. நவ்யா குடும்பத்தினர் சைலேஷுக்கு நகை, பணம் வரதட்சணையாக கொடுத்தனர். கடந்த சில மாதங்களாக கூடுதலாக வரதட்சணை வாங்கி வரும்படி நவ்யாவுக்கு, சைலேஷும், அவரது குடும்பத்தினரும் தொல்லை கொடுத்து உள்ளனர். ஆனாலும் வரதட்சணை வாங்கி வர நவ்யா மறுத்து விட்டார். இந்நிலையில், நேற்று காலை 9:30 மணிக்கு வீட்டில் உள்ள தனது அறையில் நவ்யா, துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை கணவரும், குடும்பத்தினரும் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். வரதட்சணை வாங்கி வரும்படி கொடுமைப்படுத்தியதால், நவ்யா தற்கொலை செய்து கொண்டார் என்று, கணவர் சைலேஷ், அவரது குடும்பத்தினர் மீது நவ்யாவின் பெற்றோர் தலகட்டபுரா போலீசில் புகார் செய்தனர். சைலேஷ் மீது வழக்குப்பதிவாகி உள்ளது. விசாரணை நடக்கிறது.