உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / கல்வி கடன் சுமையாக மாறும் அபாயத்தை தவிர்ப்பது எப்படி?

கல்வி கடன் சுமையாக மாறும் அபாயத்தை தவிர்ப்பது எப்படி?

மற்ற வகை கடன் போலவே, மாணவர்கள் கல்விக்கடன் பெறும் போதும், முறையான திட்டமிடல் அவசியம். கல்விக்கடன் உயர் கல்விக்கான நிதி சவாலை எதிர்கொள்ள வழி செய்தாலும், எதிர்பார்த்த வேலை கிடைக்க தாமதமானால், கடன் சுமையில் சிக்கிக் கொள்ள நேரலாம். மாணவர்களுக்கு இது இரட்டை சோதனையாக அமைந்து விடும். படிப்பை முடித்த பின், கடனுக்கான மாத தவணை செலுத்த துவங்க ஓராண்டு வரை சலுகை காலம் உண்டென்றாலும், இந்த காலத்திற்கு வட்டி உண்டு. எனவே, கல்விக்கடன் சுமையாக மாறாமல் இருப்பதற்கான வழிகளை அறிந்திருப்பது அவசியம்.

என்ன படிப்பு?

கல்விக்கடன் செயல்முறையில் கவனமாக இருக்க வேண்டும். கல்விக் கட்டணம் போன்ற வரம்புகளால், தரம் குறைந்த கல்வி நிறுவனங்கள் அல்லது வேலைவாய்ப்பு இல்லாத படிப்புகளை நாடுவதை தவிர்க்க வேண்டும். அதே போல, அதிகமாக கடன் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்.

ஆய்வு தேவை:

கல்வித்தரம், வேலைவாய்ப்பு தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொள்வது போல, விசா செயல்முறை, அன்னிய செலாவணி அம்சங்கள், கடன் ஒப்பந்த விபரங்கள் உள்ளிட்ட அம்சங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தங்குமிட செலவு உள்ளிட்டவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

இடர் அம்சம்:

கடனுக்கான மாதத் தவணையை செலுத்த தவறும் நிலை ஏற்பட்டால், முதலில் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும். எதிர்காலத்தில் கடன் பெறுவதில் சிக்கல் உண்டாகும். வங்கி சார்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம்; இது மன அழுத்தத்தை ஏற்படுத்துவதோடு, கடன் மீட்பு நடவடிக்கைக்கு உள்ளாகும் அபாயமும் உள்ளது.

நிதி நெருக்கடி:

படிப்பு முடிந்ததும், மாதத் தவணையை செலுத்துவதற்கான வழியை கண்டறிய வேண்டும். வேலை கிடைப்பது தாமதமானால், குறைந்த பட்ச தொகையை செலுத்த வேண்டும். வேலை கிடைத்தவுடன் கூடுதலாக செலுத்துவது நல்லது. படிக்கும் போதே பகுதி நேர வேலை பார்த்து செலவை குறைப்பது ஏற்றது.

திட்டமிடல்:

கல்விக்கடன் பெறுவதில் சில சிக்கல்கள் இருந்தாலும், தேவை எனில் உயர் கல்விக்காக கடன் பெறுவது சரியானதே. ஆனால், கடன் வசதியை சரியாக திட்டமிட வேண்டும். தேவைக்கேற்ப திட்டமிடுவதன் மூலமும், நிதி ஒழுக்கத்தை பின்பற்றுவதன் மூலமும் கடன் சுமையாக மாறும் வலையில் இருந்து தப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

mohanamurugan
அக் 07, 2024 20:42

தமிழ்நாட்டு அரசுக்கு நன்றி கூறுவோம் இதனால் தான் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி தமிழ்நாடு அரசு அளிக்கிறது


சமீபத்திய செய்தி