வங்கி கணக்குகளில் 39.20 சதவிகிதம் பெண்கள் பங்களிப்பு
புதுடில்லி,:நாடு முழுதும் உள்ள அனைத்து வங்கிகளிலும் பெண்கள் வைத்துள்ள வங்கி கணக்குகள் 39.20 சதவீதமாக உள்ளது. மேலும், இது கிராமங்களில் 42.20 சதவீதமாக உள்ளதாக மத்திய புள்ளி விபரங்கள் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. அனைத்து வங்கிகளிலும் உள்ள பெண்களின் கணக்குகள் 39.20 சதவீதத்தை கொண்டிருப்பதாகவும், மொத்த டிபாசிட் தொகைகளில் 39.70 சதவீதத்தை கொண்டுள்ளதாகவும் அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும், பங்கு சந்தையின் டிமேட் கணக்குகளில், பெண்களை விட ஆண்களின் கணக்கு எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. கடந்த 2021ல் 66.7 லட்சமாக இருந்த பெண்களின் கணக்கு எண்ணிக்கை, 2024ல் 2.8 கோடியாக கணிசமாக அதிகரித்து உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.