உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வர்த்தக துளிகள்

வர்த்தக துளிகள்

டாடா - எச்.பி., கூட்டு தயாரிப்பு

டாடா மோட்டார்ஸ், பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனுடன் இணைந்து, 'ஜெனியுன் டி.இ.எப்' என்ற பெயரில் டீசல் வாகனங்களுக்கான புதிய ஆயிலை அறிமுகம் செய்துஉள்ளது. புதிய தயாரிப்பானது, வணிக ரீதியான பி.எஸ். 6 ரக டீசல் வாகனங்களின் செயல்திறனை மேம்படுத்துவதோடு, நைட்ரஜன் ஆக்சைடு வெளியீட்டை குறைத்து, வாகனங்களின் ஆயுளை அதிகரிக்க உதவும். நாடு முழுதும் 23,000 ஹிந்துஸ்தான் பெட்ரோலியத்தின் சில்லரை விற்பனை நிலையங்களிலும், 2,000 டாடா மோட்டார்ஸ் விற்பனையகங்களில் புதிய தயாரிப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஊக்கத்தொகை பெற்ற ஓலா

மத்திய அரசின் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் 73.70 கோடி ரூபாயை, ஊக்கத்தொகையாக பெற்ற முதல் இருசக்கர மின்சார தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரை ஓலா எலக்ட்ரிக் பெற்று உள்ளது. உலகளாவிய மின்சார வாகன மையமாக இந்தியாவை உருவாக்க, கடந்த 2021, செப்டம்பரில், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு, 5 ஆண்டுகளுக்கு 25,938 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து இருந்தது. இந்நிலையில், கடந்த 2023-24ம் நிதியாண்டில், விற்பனை செய்த இருசக்கர மின்சார வாகனங்களுக்காக ஊக்கத்தொகையை ஓலா எலக்ட்ரிக் பெற்றுள்ளது.

118 நிறுவனங்களின் மதிப்பு சரிவு

சமீபத்திய பங்குச்சந்தை சரிவால், கடந்த 5 மாதங்களில், நாட்டின் முக்கியமான 118 நிறுவனங்களின் சந்தை மதிப்பு, ஒரு பில்லியன் டாலர் , அதாவது 8,600 கோடி ரூபாய்க்கும் கீழே குறைந்துள்ளது. இதில், ரேமண்ட், டி.டி.கே., பிரெஸ்டீஜ், கிர்லோஸ்கர் ஆயில் இன்ஜின்ஸ், இன்ஜினியர்ஸ் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்கும். முன்னதாக, சந்தை புதிய உச்சத்தை தொட்ட போது, 8,600 கோடி ரூபாய் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 618 ஆக இருந்தது. ஆனால், சந்தை தொடர் சரிவை கண்டதை தொடர்ந்து, அவற்றின் எண்ணிக்கை, 500 ஆக குறைந்துள்ளது. இதே காலத்தில், 86,000 கோடி சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்கள் எண்ணிக்கை, 127ல் இருந்து, தற்போது 91 ஆக குறைந்து உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ