உத்யம் தளத்தில் வணிகர்கள் ஆதிக்கம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் எதிர்ப்பு வங்கி கடன், அரசு மானியம் பெற இயலாமல் தவிப்பு
சென்னை,: 'உத்யம்' இணையதளத்தில், வர்த்தகர்கள் பதிவு செய்ய அனுமதிப்பதால், சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு வங்கி கடன், மத்திய அரசின் மானிய சலுகைகள் கிடைக்காமல் பாதிக்கப்படுவதாக எதிர்ப்பு எழுந்துள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மானியம், கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் வங்கிகளில் கடன் வழங்குவது உள்ளிட்ட உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்கின்றன. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை முறைப்படுத்த மத்திய அரசு, உதயம் சான்று வழங்குகிறது. இந்த சான்று பெற, உத்யம் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். உத்யம் சான்று பெற்ற நிறுவனங்களுக்கு கடன், மானிய திட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. முதலீட்டில், 2.50 கோடி ரூபாய் வரையும், விற்று முதலில், 10 கோடி ரூபாயும் வரையும் உள்ள நிறுவனங்கள் குறுந்தொழில் பிரிவில் இடம்பெறுகின்றன. ஆனால், இந்த வரம்பில் வராத வர்த்தகர்கள் அதிகளவில் உத்யம் தளத்தில் பதிவு செய்து, வங்கிகளில் அதற்கு ஏற்ப அதிக கடன் வாங்குவதால், சிறுதொழில் நிறுவனங்களுக்கு கடன் கிடைப்பதில்லை என்று புகார் கூறப்படுகிறது. இதுகுறித்து, சிறு, குறுந்தொழில்முனைவோர் கூறியதாவது: உத்யம் தளத்தில் வணிகர்களை பதிவு செய்ய அனுமதிப்பதால், சான்று பெற்று வங்கிகளில் பெரிய கடன்களை வாங்குகின்றனர். உண்மையிலேயே உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் கடன் கேட்டால், வங்கியின் கடன் இலக்கு முடிந்துவிட்டதாக கூறி மறுக்கப்படுகிறது. மானியங்களை பெறவும், கடன் கிடைப்பதிலும் தாமதம் செய்யப்படுகிறது. பத்து லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ள குறுந்தொழிலும், 125 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள நடுத்தர நிறுவனங்களும் ஒரே தளத்தில் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவது முரணாக உள்ளது. எனவே, உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு, குறுந்தொழில்களை மட்டும் உத்யம் தளத்தில் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 50% வணிகர்கள் தமிழகத்தில், 39.42 லட்சம் நிறுவனங்கள் உத்யம் தளத்தில் பதிவு செய்துள்ளன. இதில், 39 லட்சம் குறுந்தொழில்கள், 39,116 சிறிய தொழில்கள்; 2,815 நடுத்தர தொழில்கள். குறுந்தொழில்களாக பதிவு செய்யப்பட்டதில், 50 சதவீதம் வரை வர்த்தகர்களே உள்ளனர்.