உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சீன செயற்கைக்கோள் பயன்பாடு தவிர்ப்பதில் மத்திய அரசு தீவிரம்

சீன செயற்கைக்கோள் பயன்பாடு தவிர்ப்பதில் மத்திய அரசு தீவிரம்

புதுடில்லி: விண்வெளி துறையில் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில், சீனா தொடர்புடைய செயற்கைக்கோள்களை, தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு சேவைக்கு பயன்படுத்துவதை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. மத்திய அரசின் விண்வெளி துறையின் கீழ் செயல்படும் இன் - ஸ்பேஸ் எனும் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம், இந்தியாவின் ஒளிபரப்பு சேவைகளுக்கு, செயற்கைக்கோள் சேவைகளை வழங்க, சைனாசாட், அப்ஸ்டார் மற்றும் ஹாங்காங்கைச் சேர்ந்த ஆசியாசாட் ஆகிய நிறுவனங்களின் முன்மொழிவை நிராகரித்து உ ள்ளது. இந்தியாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேல் செயற்கைக்கோள் சேவைகளை வழங்கி வரும் ஆசியாசாட் நிறுவனத்துக்கு தற்போது ஏ.எஸ்., - 5 மற்றும் ஏ.எஸ்., - 7 ஆகிய இரண்டு செயற்கைக்கோள் மட்டுமே இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி வரும் 2026, மார்ச் மாதம் உடன் முடிவடைய உள்ளது. இந்நிறுவனத்தின் ஏ.எஸ்., - 6, ஏ.எஸ்., - 8, ஏ.எஸ்., - 9 ஆகியவற்றுக்கான ஒப்புதல் மறுக்கப்பட்டுள்ளது. ஜியோஸ்டார், ஜீ உள்ளிட்ட ஒளிபரப்பு நிறுவனங்கள், ஆசியாசாட் - 5, ஆசியாசாட் - 7 ஆகிய செயற்கைக்கோள்களில் இருந்து இந்தியாவின் ஜிசாட் அல்லது அமெரிக்காவை சேர்ந்த இன்டெல்சாட் செயற்கைக்கோள்களுக்கு அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள் மாற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சேவை இடையூறுகளை தவிர்க்க, இந்நிறுவனங்கள் ஏற்கனவே செயற்கைக்கோளை மாற்றும் பணியை துவங்கி விட்டன. இந்தியாவின் புதிய கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்படி, அனைத்து வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் ஒப்புதலை பெற, இன் - ஸ்பேஸ் அமைப்பிடம் வெளிப்படையாக இருப்பது அவசியம். விண்வெளி என்பது தேசிய பாதுகாப்போடு தொடர்புடையது என்பதால், மத்திய அரசு செயற்கைக்கோள் திறன் மற்றும் உள்கட்டமைப்பில் தன்னிறைவுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. இந்தியாவின் ஜிசாட் அல்லது அமெரிக்காவை சேர்ந்த இன்டெல்சாட் செயற்கைக் கோள்களுக்கு அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள் மாற அறிவுறுத்தல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ