உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  ஜி.டி.பி., கணக்கிடும் முறை மேம்படுத்தும் மத்திய அரசு

 ஜி.டி.பி., கணக்கிடும் முறை மேம்படுத்தும் மத்திய அரசு

புதுடில்லி:ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி புள்ளியை மேலும் துல்லியமாக்குவதற்கு, அதை கணக்கிடும் முறையை மேம்படுத்தி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து புள்ளியி யல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சக செயலர் சவுரப் கார்க் கூறியதாவது: ஜி.டி.பி., கணக்கிடும் முறையை மேம்படுத்தி வருகிறோம். இதற்காக, புதுப்பிக்கப்பட்ட தேசிய தரவு தொடரை இந்த வாரம் வெளியிட உள்ளோம். ஜி.டி.பி., கணக்கீடு தொடர்பான பொருளாதார நிபுணர்களின் கவலையை தீர்க்கும் விதமாக, புதிய கணக்கீட்டு முறையில் 'ப்ரைஸ் டிப்ளேஷன்' எனப்படும் விலை நுட்ப பணவாட்டம் சேர்த்து கொள்ளப்படும். ஜி.டி.பி., தரவின் துல்லியத்தை மேம்படுத்த, புதிய நுகர்வோர் விலை குறியீடு மற்றும் பழைய மொத்த விலை குறியீட்டு தொடர்களில் இருந்து இனி 500 - 600 பொருட்களை கணக்கில் கொள்ள இருக்கிறோம். இதற்கு முன்னர் 180 பொருட்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டன. புதிய மொத்த விலை குறியீட்டு தொடர் வெளியாகும் வரை இந்த முறை தொடரும். பழைய கணக்கீட்டு முறையில் குறைந்த பெயரளவு ஜி.டி.பி., வளர்ச்சி மற்றும் குறைந்த மொத்த விலை பணவீக்கம் பயன்படுத்தப்பட்டதால், பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகமாக தோன்றியது. இந்த முரண்பாடுகளை தீர்க்க இப்போது கணக்கீட்டு முறை மேம்படுத்தப்படுகிறது. இது, ஜி.டி.பி., தரவுகளின் துல்லியத்தை மேம்படுத்தும். குறிப்பாக, உள்ளீட்டு செலவுகளும், வெளியீட்டு செலவுகளும் வேறுபடும் உற்பத்தி துறை தொடர்பான தரவுகளை துல்லியமாக்கும். இவ்வாறு அவர் கூறினார். தற்போதைய தேசிய தரவுகளின்படி, நடப்பு 2025 - 26ம் நிதியாண்டில் இந்தியா, 7.4 சதவீத பொருளாதார வளர்ச்சி காணும் என மதிப்பிடப்பட்டுள்ளது மாற்றத்தின் பின்னணி இந்தியாவின் பொருளாதார தரவு கணக்கீடு பலவீனமாக இருப்பதாக சர்வதேச நிதியம் கடந்த நவம்பரில் கவலை தெரிவித்தது. இதையடுத்து, தரவுகளை கணக்கிடும் முறைகளை அரசு மேம்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதிய கணக்கீட்டு ஆண்டு அடிப்படையில், புதிய சில்லரை விலை பணவீக்க தரவுகளை அரசு இம்மாத தொடக்கத்தில் வெளியிட்டது. விரைவில் மொத்த விலை பணவீக்க தரவுகளையும் வெளியிட உள்ளது. இந்த சூழலில், ஜி.டி.பி., கணக்கிடும் முறையையும் மேம்படுத்தி வருவதாக புள்ளியியல் துறை செயலர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை