UPDATED : டிச 26, 2025 08:33 AM | ADDED : டிச 26, 2025 01:03 AM
புதுடில்லி: மூலிகை அல்லது பிற தாவரங்கள் அடிப்படையிலான கஷாயத்துக்கு, தேநீர் என்ற பெயரை பயன்படுத்த கூடாது என தயாரிப்பு நிறுவனங்களுக்கு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., உத்தரவிட்டுள்ளது.மேலும் அது தெரிவித்து உள்ளதாவது: சில நிறுவனங்கள் 'காம்பேலியா சினென்சிஸ்' என்ற உண்மையான தேயிலை செடியிலிருந்து தயாரிக்கப்படாத பொருட்களையும் 'தேநீர்' என்ற பெயரில் விற்பனை செய்வது கவனத்திற்கு வந்துள்ளது. 'மூலிகை டீ', 'மலர்கள் டீ' போன்று தவறாக சந்தைப்படுத்தப் படுகின்றன.'காம்பேலியா சினென்சிஸ்' என்ற தாவரத்திலிருந்து பெறப்படும் பானங்களான காங்க்ரா டீ, கிரீன் டீ மற்றும் இன்ஸ்டன்ட் டீ ஆகியவற்றை மட்டுமே 'தேநீர்' என்று குறிப்பிட வேண்டும். ஒவ்வொரு உணவு பொட்டலத்திலும், அதில் உள்ள உணவின் உண்மைத்தன்மை தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.எனவே, இந்த உத்தரவை அமல்படுத்தப்படுவதை கண்காணித்து, மீறும் நிறுவனங்கள் மீது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.