அதிக விலை ஸ்மார்ட்போன் விற்பனை 43% உயர்வு
புதுடில்லி: கடந்த ஜூன் முதல் செப்., வரை நான்கு மாதங்களில், இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில், சீன நிறுவனமான விவோ முதலிடம் பிடித்தது. செப்., உடன் முடிந்த காலாண்டில் ஸ்மார்ட் போன் சந்தையில் விவோ 18.30 சதவீத இடம்பிடித்ததாக ஐ.டி.சி., ஆய்வு நிறுவன தரவுகள் தெரிவிக்கின்றன. இதுவரை இல்லாத அளவாக 50 லட்சம் ஐபோன்கள் விற்பனைக்கு வந்ததாகவும், இது பிரீமியம் ரக ஸ்மார்ட்போன் சந்தையின் வளர்ச்சியை காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்., காலாண்டில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை 4.30 சதவீத வளர்ச்சி கண்டு, 4.80 கோடி போன்கள் விற்பனையானதாக, அவற்றில் பெரும்பகுதி பிரீமியம் ரக போன்கள் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 53,000 முதல் 71,000 ரூபாய் வரை விலையுள்ள பிரீமியம் ரக ஸ்மார்ட்போன்கள் விற்பனை வளர்ச்சி 43.30 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.