உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / முதலீடு செயலிகளை திறம்பட பயன்படுத்துவது எப்படி?

முதலீடு செயலிகளை திறம்பட பயன்படுத்துவது எப்படி?

டிஜிட்டல் செயலிகள் முதலீடு செய்வதை எளிதாக்கி இருந்தாலும், முதலீடு முடிவுகளை மேற்கொள்வதற்கான அடிப்படை மாறிவிடவில்லை.நவீன தொழில்நுட்பத்தின் தாக்கத்தால், முதலீடு செய்வது எளிதாகி இருக்கிறது. மேலும் செழுமையான அனுபவமாகவும் மாறியிருக்கிறது. பங்குச்சந்தை பரிவர்த்தனை துவங்கி, எஸ்.ஐ.பி., முதலீடு மேற்கொள்வது, டிஜிட்டல் தங்கம் வாங்குவது என முக்கிய நிதி செயல்பாடுகளை டிஜிட்டல் செயலிகள் வாயிலாகவே செய்ய முடிகிறது. அதோடு, முதலீடு தொடர்பான செயல்பாட்டை சார்ட்கள், வரைபடங்கள் மூலமாக செறிவாகவும் வழங்குகின்றன. முந்தைய தலைமுறைக்கு இல்லாத வாய்ப்புகளாக இவை அமைகின்றன.

டிஜிட்டல் அனுபவம்

முதலீடு செயலிகளின் தாக்கத்தை இளம் தலைமுறையினர் மத்தியில் நன்றாக காண முடிகிறது. அண்மை புள்ளிவிபரங்களும் இதற்கு வலு சேர்க்கின்றன. இளம் தலைமுறையினர் பலரும் வைப்பு நிதி போன்ற பாரம்பரிய முதலீடு வாய்ப்புகளை விட, சம பங்குகள், மியூச்சுவல் பண்ட் போன்ற முதலீடு வாய்ப்புகளை அதிகம் நாடுவதாக அண்மையில் வெளியான அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. பணவீக்கம் பற்றிய புரிதல், வைப்பு நிதிகளை விட சம பங்கு முதலீடு ஏற்றது எனும் விழிப்புணர்வை அளித்துள்ளது. இந்த போக்கு வரவேற்கத்தக்கது என்றாலும், முதலீடு செயலிகளை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருப்பதும் அவசியம். நிதி செயலிகள் முதலீடு செய்வதை எளிதாக்கி இருந்தாலும், அவை முதலீடு மற்றும் அதன் இடர் தொடர்பான புரிதலை அளிப்பதாக கருத முடியாது. டிஜிட்டல் செயலிகளை பயன்படுத்தும் ஒருவர், அந்த மேடையின் அம்சங்களில் தேர்ச்சி பெறுவதால் முதலீடு தேர்ச்சி பெற்றுவிட்டதாக நினைத்து செயல்படுவது தவறு. டிஜிட்டல் செயலிகள், முதலீடு மேற்கொள்வதற்கான கருவிகளே தவிர, முதலீடு ஆலோசனைகளோ அல்லது முதலீடு ஆய்வுக்கான மாற்றோ அல்ல என புரிந்து கொள்ள வேண்டும்.

சொந்த முடிவுகள்

டிஜிட்டல் செயலிகள் பயனாளிகள் முடிவை கச்சிதமாக நிறைவேற்றி தருகின்றன. ஆனால், இவை சரியான முடிவெடுக்க உதவுவதில்லை. நிதி விஷயங்கள் தொடர்பான அடிப்படை புரிதலே முடிவெடுத்தலில் உதவும். ஆனால், செயலிகளை நம்பி முடிவெடுக்கும் போது தவறுகள் நிகழலாம். முதலீட்டின் பலனை மனதில் கொள்ளும் போது, தொடர்புடைய இடர் அம்சங்களை மறந்துவிடக் கூடாது. மேலும், சந்தையின் தற்போதைய ஏற்ற இறக்கமான சூழலுக்கு மத்தியில், மேம்பட்ட முதலீடு முடிவுக்கு வழிகாட்டுவதாக சொல்லும் செயலிகளும் ஈர்க்கின்றன. ஆனால், சந்தையின் போக்கிற்கு ஏற்ப செயல்பட முடியாது எனும் அடிப்படை புரிதல் இல்லை எனில், பாதகமான விளைவே ஏற்படும்.பங்கு சந்தை முதலீட்டை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். மகளின் உயர் கல்வி அல்லது திருமணத்திற்காக முதலீட்டை மேற்கொள்ளும் ஒருவரை எடுத்துக் கொள்வோம். அவரது இலக்கு 30 லட்சம் ரூபாய் என வைத்துக் கொள்வோம். இதுவரையான முதலீட்டில் 20 லட்சம் ரூபாய் அடைந்துள்ள நிலையில், இன்னும் இரண்டு ஆண்டுகளில் அவருக்கு பணம் தேவை. இந்த சூழலில், இரண்டு ஆண்டுகளில் 10 லட்சத்தை அடைய உதவும் முதலீடுகளை செயலிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆனால், சந்தையின் இடர்களை மனதில் கொள்ளும் போது, இலக்கை நெருங்கும் நிலையில், முதலீட்டை விலக்கிக் கொண்டு, வைப்பு நிதி போன்ற நிலையான பலன் அளிக்கும் சாதனங்களில் முதலீடு செய்வது ஏற்றதாக இருக்கும் என்கின்றனர். இத்தகைய புரிதலை செயலிகள் அளிக்காது; முதலீட்டாளர்கள் தான் வளர்த்துக்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை