ஆஸி.,யில் 10 லட்சம் வீடுகள் இந்தியா கட்டித்தர பேச்சு
மும்பை:ஆஸ்திரேலியாவில், 10 லட்சம் வீடுகள் கட்டித் தருவது தொடர்பாக, அந்நாட்டு அரசுடன் பேச்சு நடத்தி வருவதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். இத்திட்டத்துக்கு நிதியுதவி பெற, ஐக்கிய அரபு எமிரேட்சுடன் விவாதித்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார். ஆஸ்திரேலியாவில் வீடுகளின் தேவைக்கும், வினியோகத்துக்கும் இடையே பெரிய இடைவெளி நிலவுவதாகவும், இதுவே அந்நாட்டில் வீடுகளின் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய கட்டுமான தொழில் துறையினர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று, பியுஷ் கோயல் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: ஆஸ்திரேலியாவில், 10 லட்சம் வீடுகள் கட்டித் தருவது தொடர்பாக அந்நாட்டு வர்த்தக அமைச்சருடன் பேச்சு நடத்தி வருகிறேன். அங்கு, 10 லட்சம் வீடுகள் கட்டித் தருவதற்கு குறைந்தபட்சம் 44 லட்சம் கோடி ரூபாய் செலவாகும். இத்திட்டத்துக்கு நிதியுதவி வழங்குவது குறித்து, இந்தியா வந்த ஐக்கிய அரபு எமிரேட்சின் அன்னிய வர்த்தக அமைச்சருடனான சந்திப்பின் போது விவாதித்தேன். இதற்காக, இந்திய கட்டுமான தொழிலாளர்கள் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல அனுமதி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்நாட்டு தரநிலைகளின்படி வீடு கட்டுவதற்கு தேவையான பயிற்சி பெற்று இந்த பணியில் ஈடுபட வேண்டும். இந்த வாய்ப்பை இந்திய கட்டுமான தொழில் துறையினர் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.